இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்,கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் களத்துக்கு மீண்டும் திரும்ப கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட் கடந்த சில நாட்களாக ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாமல் இருந்தாலும் டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இந்திய அணி தடுமாறும் போதெல்லாம் ரிஷப் பண்ட் அணியை காப்பாற்றினார். இந்த நிலையில் அவர் இல்லாததால் டெஸ்ட் அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கே எஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் கேஸ் பரத் மூன்று முறை அரைசதத்திற்கு மேல் அடித்திருக்கிறார்.
மேலும் நல்ல அனுபவ வீரராகவும் திகழ்வதால் இவருக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுக்கு முதல் முறையாக இடம் கிடைத்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான்ன் கிஷன், அதன் பிறகு நடைபெற்ற கேரளாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் சதம் அடித்தார். எனினும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ரிஷப் பண்ட் போல இடது கை பேட்ஸ்மனாக இருக்கும் இஷான் கிஷன் அவரைப் போலவே நடுவரிசையில் விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என அவர் மீது நம்பிக்கை தேர்வுக்குழு நம்பிக்கை வைத்துள்ளது. மற்றொரு நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனுக்கு காயம் காரணமாக இந்த தொடருக்கு பரிசீலிக்கப்படவில்லை. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறது.