இந்தியா – தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரில் இருந்து சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விலகல் – புதிய வீரர்கள் பட்டியல் வெளியீடு

0
2191
Mohammed Siraj and Washington Sundar

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற சனிக்கிழமை 15ஆம் தேதி அன்று முடிவு பெற இருக்கிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 19 தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த இரண்டு வீரர்களுக்கு பதிலாக தற்போது புதிய இரண்டு வீரர்கள் இணைந்து உள்ளனர்.

ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது சிராஜ்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் கடைசியாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற பொழுது அவருடைய விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருசில மாத காலம் ஓய்வு எடுத்து வந்தார். நன்கு குணமடைந்து விளையாட தயாராக இருந்த அவருக்கு, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது.

- Advertisement -

ஒருநாள் போட்டி தொடரில் விளையாட வாஷிங்டன் சுந்தர் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படும் வேளையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரது உடல்நிலை குணமாக சில நாட்கள் தேவைப்படும் என்பதால் ஒருநாள் தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

அதேபோல தற்பொழுது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் முகமது சிராஜுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. ஏறக்குறைய ஒருநாள் தொடரிலும் முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் களம் இறங்கப் போகும் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்களுடன் ஜெயந்த் யாதவ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறார். எனவே வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒரு நாள் தொடரில் ஜெயந்த் யாதவை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

- Advertisement -

மறுபக்கம் முகமது சிராஜ் இறுதி நேரத்தில் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்கு மாற்று வீரராக நவ்தீப் சைனியை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்திய அணியின் புதிய வீரர்கள் பட்டியல் :

கேஎல் ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா ( துணை கேப்டன் ) ஷிகர் தவான், ருத்ராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஹால்,ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.