கிரவுண்ட் மாத்தி கொடுத்தா தான் உலககோப்பைக்கு வருவோம்னு சொன்ன பாகிஸ்தானுக்கு… பிசிசிஐ, ஐசிசி கொடுத்த தீர்ப்பு!

0
10819

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி கிட்டத்தட்ட ஐந்து மைதானங்களில் நடைபெறுகிறது. அதில் அகமதாபாத் மற்றும் சென்னை மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு மைதானங்களிலும் விளையாடமாட்டோம் மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ அமர்வு முடிவுகளை அறிவித்திருக்கிறது.

50 ஓவர் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. மொத்தம் பத்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன. 8 அணிகள் உறுதியாகிவிட்டது. இரண்டு அணிகள் குவாலிபயர் சுற்று அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

- Advertisement -

அரசியல் காரணங்களுக்காக கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிரெதிர் நாடுகளுக்கு சென்று கிரிக்கெட்டில் மோதிக்கொள்வதில்லை. இந்நிலையில் இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கு வரமாட்டோம் என்று பாகிஸ்தான் தரப்பு முதலில் முரண்டு பிடித்தது.

பாகிஸ்தான் அணிக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும். அதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று பிசிசிஐ உறுதி செய்தது. மேலும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கான அட்டவணையும் அவர்களுக்கு முன்னோட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய மைதானங்களில் நாங்கள் விளையாட மாட்டோம். எங்களது போட்டிகளை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தது.

- Advertisement -

இதற்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டு தரப்புகளும் அமர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுத்த கோரிக்கையை பரிசீலனை செய்திருந்தது. அதில் பிசிசிஐ தரப்பு, அட்டவணைகள் அனைத்தும் உறுதியாகிவிட்டன. அந்தந்த மைதானங்களுக்கு அனைத்தும் கொடுத்து அனுப்பப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் பிட்ச்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இப்போது இதில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று ஐசிசிக்கு பதில் கூறியதாக தகவல்கள் வந்திருக்கிறது.

இதனை ஏற்றுக்கொண்ட ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுத்த கோரிக்கையை ரத்து செய்து இருக்கிறது. போடப்பட்ட அட்டவணையில் விளையாட வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், அட்டவனைகள் போடப்பட்டபின் அதில் மாற்றம் வேண்டும் என உரிய காரணங்கள் இல்லாமல் கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது என ஐசிசி திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வருகிறது. திங்கள்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் ஐசிசி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.