ஐபிஎல் தொடக்க காலத்தில் அதிக நட்சத்திர வீரர்களைப் பெற்றிருந்தது டெல்லி அணி. கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக், ஏ பி டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக் என ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருந்தனர். 2008ஆம் ஆண்டு டெல்லி அணி தான் விளையாடிய 12 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்று அதில் தோல்வி அடைந்து வெளியேறியது.
அதற்குப் பிறகு அரை இறுதிக்கு அவ்வப்போது வந்தாலும் டெல்லி அணியால் இன்னமும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. கௌதம் கம்பீர், டேவிட் வார்னர் என பலரும் டெல்லி அணியை வழி நடத்தியுள்ளனர். வலுவான அணியான டெல்லி முக்கியத் தருணங்களில் சொதப்பி விடுவதால் ஐபிஎல் கோப்பை இன்னமும் கனவாகவே இருக்கிறது.
இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு சவுரவ் கங்குலியை டெல்லி அணி இயக்குனராக நியமித்தது. எனவே இவரது வழி நடத்துதலில் டெல்லி அணியும் கடந்த நான்கு ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. எனவே இம்முறை டெல்லி அணி கோப்பையை வெல்லும் நோக்கில் திறமையான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஹரி புரூக், ஸ்டெப்ஸ், ரிக்கி புய், குமார் குஷாக்ரா, ரசித்தர், ரிச்சட்சன், சுமித் குமார், சாய் ஹோப் ஆகிய வீரர்களை நடந்து முடிந்த மினி ஏலத்தில் எடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இளம் வீரர் குமார் குஷாக்ரா. 19 வயது பேட்ஸ்மேன் ஆன குமார் குஷாக்ரா ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குமார் குசாக்ரா ஜோனல் லிஸ்ட் ஏ போட்டியில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 227 ரன்கள் குவித்துள்ளார். 109.13 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். மேலும் இவர் தியோதர் டிராபி போட்டியில் கிழக்கு மண்டலத்திற்காக அரை சதமும் அடித்துள்ளார். ஆகஸ்டில் நடைபெற்ற தியோதர் டிராபி போட்டியில் ஆறாவது அதிக ரன்கள் அடித்தவர் என்று பெருமையும் பெற்றுள்ளார்.
இவரை டெல்லி அணி 7.20 கோடிக்கு எழுத்தில் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இவரை எடுக்க முக்கிய காரணம் ஏலத்தின் போது சவுரவ் கங்குலியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு மட்டுமே. அது குஷாக்ராவின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்துள்ளது. இது குறித்து தனது அனுபவங்களை குஷாக்ரா பகிர்ந்து கொண்டு உள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது
“சவுரவ் சார் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து என்னை டெல்லி கேப்பிட்டல் அணி ஏலத்தில் எடுக்கப் போகிறது என்று கூறினார். கடந்த இரண்டு வருடங்களாக எனது செயல்பாடுகளைப் பாராட்டி நான் விளையாடுவது நேரில் பார்க்க ஆசைப்பட்டார். குரு கிராமில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று சோதனை போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன்.
பெங்களூருவில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு 25 பந்துகளில் 60 ரன்கள் குவித்தேன். கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு முகாமில் கலந்து கொண்டு 23 பந்துகளில் 60 ரன்கள் குவித்தேன். இதுவே என்னை ஏலத்தில் டெல்லி அணி எடுக்க முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறினார்.