வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் அணியிடம் மூன்றாவது போட்டியில் தோற்று அதிர்ச்சிகரமாக ஒயிட் வாஸ் ஆகி இருக்கிறது.
மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்திருந்தது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் வலிமையான வடிவத்தில் பங்களாதேஷ் ஒயிட் வாஸ் செய்து அசத்தியிருக்கிறது.
பங்களாதேஷ் ஜாகேர் அலி அசத்தல் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் லிட்டன் தாஸ் 13 பந்தில் 14 ரன், பர்வேஸ் ஹூசைன் 21 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து மெகதி ஹசன் மிராஸ் 23 பந்தில் 29 ரன், கடைசி கட்டத்தில் தன்சிம் ஹசன் சாகிப் 12 பந்தில் 17 ரன் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு நடுவில் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்ட ஜாகேர் அலி 41 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் குவித்தார். பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் ரோமரியோ செப்பர்டு 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஒயிட் வாஸ் ஆன வெஸ்ட் இண்டீஸ்
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மூன்றாவது டி20 போட்டியிலும் அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த அணிக்கு ரொமாரியோ செப்பர்டு 27 பந்தில் 33 ரன், தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் 18 பந்தில் 23 ரன் தாக்குப்பிடித்து எடுத்தார்கள். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்து சுருண்டது. பூரன் இந்த தொடர் முழுவதும் ஏமாற்றம் தந்தார்.
இதையும் படிங்க : கடைசி 2 டெஸ்ட்.. ஆஸி அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் நீக்கம்.. 19 வயது வீரர் அறிமுகம்.. 3 மாற்றங்கள்
இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி மூன்றாவது டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சில் ரிசாத் ஹுசைன் 3, டஸ்கின் அஹ்மத் மற்றும் மெஹதி ஹாசன் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பங்களாதேஷ் அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது!






