உலகக்கோப்பைக்கு பிறகு நியூசிலாந்து அணி பங்களாதேஷ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. உலகக்கோப்பைக்கு முன்பாக இரண்டு அணிகளும் கலந்து கொண்ட மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கா நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜாகிர் ஹுசைன் 8 ரன்னிலும் மொஹமது ஹசன் ஜாய் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் நஜ்முல் ஹுசைன் சான்டோ 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரை அடுத்து ஆட வந்த முமீனுல் ஹக் 5 ரன்னில் அவுட் ஆனார். இதனால் பங்களாதேஷ் அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹீம் மற்றும் ஷகாதத் உசேன் இருவரும் இணைந்து தங்கள் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த முஸ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஃபீல்டுக்கு இடையூறு செய்ததாக நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார். அவர் தடுத்து ஆடிய பந்து ஸ்டெம்பை நோக்கி சென்ற போது அதனை கைகளால் தடுத்தார். இதனைத் தொடர்ந்து நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டு ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஷகாதத் ஹுசைன் 31 ரன்னில் அவுட் ஆனார். இதன் பிறகு ஆட வந்த பங்களாதேஷ் வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாததால் அந்த அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மிச்சல் சான்ட்னர் மற்றும் கிளன் ஃபிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்த அணி ஆரம்பம் முதலே சரிவை சந்தித்தது . அந்த அணியின் துவக்க வீரர்கள் கான்வே 11 ரன்னிலும் டாம் லேதம் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். இவர்களைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து விளையாட வந்த ஹென்றி நிக்கோலஸ் 1 ரன்னில் அவுட் ஆனார். நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் நியூசிலாந்து 46 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இருந்தது. டெரில் மிட்சல் 12 ரன்களுடனும் பிலிப்ஸ் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஆல் ரவுண்டர் மெகதி ஹசன் மிராஜ் 3 விக்கெட்டுகளும் தைஜுன் இஸ்லாம் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மட்டும் 15 விக்கெட் விழுந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.