பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் திடீர் விலகல்.. பரபரப்பான அறிக்கை வெளியீடு!

0
1191
Babar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. ஆனாலும் நான்கு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

இது மிக மோசமான செயல்பாடு கிடையாது என்ற போதிலும் கூட, ஆப்கானிஸ்தான அணி உடன் தோற்றது மற்றும் கேப்டன்சி, திட்டங்கள் என சொதப்பியது, இதெல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய பிரச்சனைகளை உண்டு செய்து இருந்தது.

- Advertisement -

எனவே உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வரும் என்று கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து இருந்தது. உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் பொழுதே தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து இன்சமாம் விலகினார்.

நேற்று முன் தினத்தில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் தன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும் இது அதிர்ச்சியானதாகவே அமைந்திருக்கிறது.

பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வெளியிட்ட அறிக்கையில் கூறும் பொழுது “2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கேப்டனாக பொறுப்பேற்க வந்த அழைப்பு எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் பல உயர்வையும் தாழ்வையும் பார்த்திருக்கிறேன். ஆனால் பாகிஸ்தானின் பெருமையையும் மரியாதையையும் நிலை நிறுத்துவதற்கு நான் உறுதியாக இருந்திருக்கிறேன்.

- Advertisement -

வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் நாங்கள் முதல் இடத்திற்கு வந்தது வீரர்கள் பயிற்சி நிர்வாகம் என அனைவரின் கூட்டு உழைப்பு. ஆனால் இந்த நேரத்தில் எங்களுக்கு அசைக்க முடியாத ஆதரவை கொடுத்த ஆர்வம் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு. ஆனால் இந்த நேரத்தில் சரியான ஒன்று என்று நான் நினைக்கிறேன்.

ஒரு வீரராக மூன்று வடிவங்களிலும் நான் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்துவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன், புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிக்க நான் இங்கு வந்திருக்கிறேன்.

இந்த குறிப்பிட்ட பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்!