“பாபர் அசாம் 3 அரைசதம் அடிச்சிருக்காரு.. ஆனா ஆட்டத்தை முடிக்க முடியல.. அதுக்கு காரணம்..” – ஷாகின் அப்ரிடி பேச்சு

0
294
Shaheen

பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களில் உள்நாட்டில் பெரிய அளவில் விளையாடி, நிறைய வெற்றிகளை குவித்து வந்தது. குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் வலிமையாக இருந்தது.

கடந்த இரண்டு டி20 உலக கோப்பை தொடர்களில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு காலக்கட்டமாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் டி20 வெற்றிக்கு பேட்டிங் யூனிட்டில் முகமது ரிஸ்வான் மற்றும் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இருவரும் மிக முக்கிய காரணங்களாக விளங்கினார்கள். இதேபோல் பந்துவீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி இருந்தார்.

இதற்குப் பிறகு அவர்கள் தங்கள் உள்நாட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து ஆடிய பிறகு, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெரிய அடிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.

குறிப்பாக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பலவீனம் வெளிப்படையாக தெரிந்தது. அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஸ்ட்ரைக்ரேட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 127 மற்றும் 129 என்கின்ற அளவில்தான் இருக்கிறது.

- Advertisement -

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளையும் தோற்று தொடரையும் இழந்துவிட்டது.

ஆனால் இந்த மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் சிறப்பாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக அவர் மூன்று அரைசதங்கள் மூன்று ஆட்டங்களில் அடித்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150 க்கு மேல் இருக்கிறது. ஆனாலும் அவரால் இறுதி வரை விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

மூன்றாவது போட்டி தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாகின் அப்ரிடி “பாபர் தான் எவ்வளவு திறமையானவர் என்பதை மீண்டும் நிரூபித்து தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அணிக்கு அடித்திருக்கிறார். ஆனால் அவரால் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைக்க முடியவில்லை.

ஆனால் இதைச் செய்வதற்கு நீங்கள் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு பாபர் அசாம் உடன் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் இருந்திருக்க வேண்டும். அவருக்கு எதிர் முனையில் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்காததால், அவரால் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.