வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பாகிஸ்தான் அணியின் வீரரான பாபர் அசாம் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் மோசமான பங்களிப்பின் மூலம் தரவரிசை பட்டியலில் கிடுகிடுவன கீழே சரிந்துள்ளார். இதில் இந்திய அணியின் விராட் கோலி ஆச்சரியம் அளிக்கும் வகையில் முன்னேறி இருக்கிறார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதில் அந்த அணியின் முன்னணி வீரரான பாபர் அசாம் முதல் இன்னிங்ஸில் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் அணியால் மோசமான தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி கட்டாயம் வெற்றி பெற்ற சூழ்நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் விராட் கோலி இந்த ஆண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத நிலையில் தரவரிசையில் முன்னேற்றம் கண்டிருப்பது ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் வீரரான பாபர் அசாம் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தினார். தற்போது வங்கதேச அணிக்கு எதிராகவும் மோசமான பார்ம் தொடர்வதால் டெஸ்ட் தரவரிசையில் ஆறு இடங்கள் கீழே சரிந்து 734 புள்ளிகளோடு 9வது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் விராட் கோலி இதற்கு முன்பாக 10வது இடத்தில் இருந்த நிலையில் இரண்டு இடங்கள் முன்னேறி 737 புள்ளிகளோடு 8வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதில் இந்த வருடம் எந்த டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 740 புள்ளிகளோடு 7வது இடத்தில் இருக்கிறார். 751 புள்ளிகளோடு இந்திய அணியின் ரோகித் சர்மா 6வது இடத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார்.
இதையும் படிங்க:ரோகித்துக்கு எதிரா சொல்லலை.. வீரர்கள் மேல்தான் தப்பு.. விதி மேல் இல்லை – அஸ்வின் விளக்கம்
இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் இலங்கை அணி எதிரான டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம் மூன்று இடங்கள் முன்னேறி 758 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் டேரி மிச்சல் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர்.இதில் 881 புள்ளிகளோடு இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.