இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் கில் தொடர்ந்து வளர்வதற்கு என்ன மாதிரியான சூழ்நிலை இருக்கிறது என்பது குறித்து அக்சர் படேல் பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் தலைமையில் நாளை மறுநாள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் கேப்டனாக முதன் முதலில் இங்கிலாந்து மண்ணில் அறிமுகமான கில், தற்போது ஒருநாள் கேப்டனாக ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகமாகிறார்.
கில்லுக்கு அழுத்தம் கிடையாது
தற்போது இந்திய ஒரு நாள் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சக வீரர் கில்லுக்கு அணியில் அழுத்தம் இருக்கிறதா? அவர் மேற்கொண்டு வளர்வதற்கு என்ன மாதிரியான சூழல் அணியில் இருக்கிறது? என்பது குறித்து அக்சர் படேல் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “கில் கேப்டனாக பொறுப்பேற்ற போது அவருக்கு எந்த விதமான அழுத்தமும் இல்லை. நான் மற்ற கேப்டன்களுடனும் விளையாடி இருக்கிறேன் என்ற வகையில் இது அவருடைய சிறந்த குணமாக இருக்கிறது. இது மாற்றத்திற்கான காலம். இளம் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் இவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் உடனடியாக எங்கும் விளையாடக் கூடிய வகையில் இருக்கிறார்கள்”
டிரெஸ்ஸிங் ரூமில் இதுதான் நடக்கும்
“தற்போது அணியில் ரோகித் மற்றும் விராட் கோலி இருக்கிறார்கள். மேலும் மிக வேகமாக மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படியான ஒரு காலகட்டத்தில் இந்த அனுபவ வீரர்கள் இளம் வீரர்களுடன் இருப்பது மிகவும் சிறந்த ஒன்று. இளைஞர்கள் கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக் கொள்வார்கள்”
இதையும் படிங்க : விராட் ரோகித் 2027 உலக கோப்பை ஆடுவார்களா?.. அகர்கர் தந்த வினோத பதில்.. ரசிகர்கள் கோபம்
“டிரெஸ்ஸிங் ரூமை பொறுத்தவரை களத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது பற்றிதான் விவாதங்கள் இருக்கும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருப்பதால் அணிக்கு இது நல்ல சூழ்நிலையாக அமையும். மேலும் கில் கேப்டனாக வளர்வதற்கும் இது நல்ல சூழலாக இருக்கிறது. எங்களுடைய அணி இளைஞர்கள் மற்றும் அனுபவ வீரர்களின் கலவையாக இருக்கிறது. நாங்கள் நல்ல முறையில் விளையாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.






