இளைஞனே விதியை ஒருபோதும் சோதித்து பார்க்காதே – ரியான் பராக்குக்கு அறிவுரை கூறியுள்ள மேத்யூ ஹெய்டன்

0
2938

நேற்றுமுன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இது ஒரு பக்கமிருக்க அப்போட்டியில் கடைசி நேரத்தில் ரியான் பராக் அற்புதமாக ஃபீல்டிங் செய்து மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த பந்தை பிடித்தார் . அந்தக் கேட்சை பிரமாதமாக எடுத்த ரியான் பராக் வித்தியாசமான முறையில் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அதைச் சுட்டிக்காட்டி பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் சில அறிவுரைகளை ரியான் பராக்க்கு கொடுத்துள்ளார்.

- Advertisement -

ரியான் பராக் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்

அந்த போட்டியில் 19-வது ஓவரை ஒபெட் மெக்காய் வீசினார். அந்த ஓவரில் 3-வது பந்தில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த பந்தை சிறுத்தை போல் தாவிப்பிடித்து ரியான் பராக் அசத்தினார். மிகவும் கடினமான கேட்ச் என்பதால் நடுவர்கள் முடிவை 3-வது நடுவரிடம் கொடுத்தனர்.

மிகவும் கடினமான கேட்ச் என்பதால் மூன்றாவது நடுவர் பல முறை வீடியோவை ரீப்ளே செய்து பார்த்தார். பந்து சரியாக ரியான் பராக் கைகளில் உட்காரவில்லை, தரையில் பட்டு விட்டது என கணித்த 3வது நடுவர் நாட் அவுட் கொடுத்தார். இதனால் ரியான் பராக் சற்று விரக்தி அடைந்தார்.

- Advertisement -

அதற்கு அடுத்த ஒவரான கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை ஸ்டொய்னிஸ் தூக்கி அடிக்க அது லாங் ஆன் பக்கமாகச் சென்றது. அங்கே நின்று கொண்டிருந்த ரியான் பராக் இம்முறை பந்தை சுலபமாக பிடித்தார்.

பந்தை பிடித்தவுடன் முந்தைய ஓவரில் நடந்த விஷயத்தை நினைவு கூறும் வகையில், பந்தை கீழே தரையில் படும்படி ஒரு பாவனை செய்தார்.
அதாவது இம்முறை பந்து தரையில் படவில்லை, தான் சரியாக பிடித்து விட்டேன் என்பது போல செய்கை மூலம் ரியான் பராக் நக்கலடித்தார்.

அறிவுரை கூறிய மேத்யூ ஹெய்டன்

அப் போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹெய்டன் அப்பொழுதே தன்னுடைய அறிவுரையை ரியான் பராக்குக்கு தெரிவித்தார்.”இளைஞனே உனக்கு சில அறிவுரைகள். கிரிக்கெட் என்பது நீண்ட விளையாட்டு, அதில் நாம் நீண்ட காலம் விளையாடி ஆக வேண்டும். நம் அனைவருக்கும் இங்கே நீண்ட நினைவுகள் இருக்கப் போகின்றன. விதியை ஒருபோதும் நீங்கள் சோதித்து பார்க்க கூடாது. ஏனென்றால் அது(நீங்கள் செய்யும் விஷயங்கள்) நினைத்ததை விட வெகு விரைவில் உங்களுக்கே ஒரு கட்டத்தில் வந்து சேரும்”, என்று மேத்யூ ஹெய்டன் அறிவுரை கூறியுள்ளார்.