நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மண்ணில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
தற்போது ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
ரசல் அதிரடி
இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 36 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து சிம்ரன் ஹெட்மாயர் 14, ரோஸ்டன் சேஸ் 16, ரோமன் பவல் 12, ஷர்ஃபான் ரூதர்போர்ட் 0 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடியை உண்டாக்கினார்கள். இந்த நிலையில் கடைசியில் வந்த ஆண்ட்ரே ரசல் 15 பந்துகளில் அதிரடியாக 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
ஜோஸ் இங்லீஷ் வெற்றி இன்னிங்ஸ்
இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 10 பந்துகளில் 12 ரன்கள், கேப்டன் மிட்சல் மார்ஸ் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜோஸ் இங்லீஷ் மற்றும் கேமரூன் கிரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை எளிதாக ஆஸ்திரேலியா பக்கம் முடித்து வைத்தார்கள்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு பதிலடி கொடுப்போம்.. வாயை விட்டால் அவ்வளவு தான்.. இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து
ஆஸ்திரேலியா அணிக்கு ஆட்டம் இழக்காமல் ஜோஸ் இங்லீஷ் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 78 ரன்கள், கேமரூன் கிரீன் 32 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 58 ரன் குவித்தார்கள். இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெறும் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 15.2 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






