AUS vs SA.. மார்ஸ்-டிம் டேவிட் சாதனை.. இந்திய வம்சாவளி வீரர் கலக்கல்.. தென் ஆப்பிரிக்கா பரிதாபம்.. ஆஸி அபார வெற்றி!

0
2549
Sangha

ஆஸ்திரேலியா அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் டிவால்ட் பிரிவீஸ், ஜெரால்டு கோட்சி அறிமுகம் ஆனார்கள். ஆஸ்திரேலிய தரப்பில் இந்திய வம்சாவளி வீரர் தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி என நான்கு வீரர்கள் அறிமுகமானவர்கள்

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் டிராவீஸ் ஹெட் 6, மேத்யூ ஷார்ட் 20 ரண்களில் இருவரும் வெளியேறினார்கள். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஷ் 1, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 6 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இதற்கிடையில் மூன்றாவது வீரராக களம் வந்த கேப்டன் மிட்சல் மார்ஸ் மற்றும் ஆறாவது வீரராக வந்த டிம் டேவிட் இருவரும் ஜோடி சேர்ந்தது முதலே விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடியில் இறங்கி மிரட்டினார்கள். ஒரு முனையில் புதிய கேப்டன் மார்ஸ் அரைசதம் அடித்தார். இன்னொரு பக்கத்தில் மிகவும் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 28 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. அடுத்து வந்த அறிமுக வீரர் ஆரோன் ஹார்டி 14 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் மார்ஸ் 49 பந்தில் 13 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உடன் 92 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லிசார்டு வில்லியம்ஸ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 44 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் 56 (43) தவிர யாருமே சரியான பங்களிப்பை தரவில்லை. ராஸி வாண்டர் டெசன் 21, மார்க்கோ யான்சன் 20 ரன்கள் எடுத்தார்கள்.

தென்னாப்பிரிக்க அணி முடிவில் 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்களில் சுருண்டு, 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அறிமுக இந்திய வம்சாவளி வீரர் தன்வீர் சங்கா நான்கு ஓவர்களில் 31 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3, ஜான்சன் 2, சீன் அப்பாட் 1 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.