ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளையும் வென்று, மார்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் இன்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இரு அணிகளுக்கு இடையே ஆரம்பித்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது.
குயின்டன் டி காக் 11, ராஸி வாண்டர் டெசன் 8, எய்டன் மார்க்ரம் 19, ஹென்றி கிளாசன் 14, டேவிட் மில்லர் 0 என வரிசையாக சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்கள். இதற்கு அடுத்து கேப்டன் டெம்பா பவுமா மற்றும் மார்க்கோ யான்சன் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி அணியை கொஞ்சம் மீட்டார்கள்.
இந்த நிலையில் மார்க்கோ யான்சன் 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் டெம்பா பவுமா அரைசதம் கடந்தார். ஜெரால்ட் கோட்ஸி 2, கேசவ் மகராஜ் 2, ககிசோ ரபாடா 1 என மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விக்கெட் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஒரு முனையில் கேப்டன் டெம்பா பவுமா காலில் தசைப்பிடிப்போடு நின்று, மறுமுனையில் லுங்கி நிகிடியை வைத்துக்கொண்டு அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். பந்துகள் பவுண்டரிகளுக்கு பறந்தது. இறுதியில் போராட்டம் மிக்க அற்புதமான ஒருநாள் கிரிக்கெட் சதத்தைக் கொண்டுவந்தார். இறுதியில் லுங்கி நிகிடி 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
டெம்பா பவுமாவுக்கு கடைசி ஆறு ஒருநாள் இன்னிங்ஸ்களில் இது மூன்றாவது சதமாகும். மேலும் இதில் ஆட்டம் இழக்காமல் ஒரு 90 ரன்களும் இருக்கிறது. 49 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 222 ரன்கள் சேர்த்தது. ஹேசில்வுட் 3, ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகள் ஆஸ்திரேலியா தரப்பில் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 0, டிராவிஸ் ஹெட் 33, மிட்சல் மார்ஸ் 17, ஜோஸ் இங்கிலீஷ் 1, அலெக்ஸ் கேரி 3, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 3, சீன் அப்பாட் 9 என ஏழு விக்கெட்டுகள் 113 ரன்களுக்கு சரிந்தது.
கேமரூன் கிரீன் ஹெல்மெட்டில் பந்து தாக்கி நடுவில் வெளியேறி இருந்தார். இந்தக் காரணத்தால் இவருக்குப் பதிலாக, இந்தப் போட்டியில் இடம்பெறாத மார்னஸ் லபுசேன் விளையாட வந்தார். இவருடன் ஆஸ்டன் அகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்க்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஜோடி தொடர்ந்து சிறப்பாக விளையாடி,112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 40.2 ஓவரில் இலக்கை எட்டி, அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தது. மார்னஸ் லபுசேன் 80, ஹாஸ்டல் அகர் 48 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள். பவுமா மற்றும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் போராட்டம் வீண் ஆனது. பிளேயிங் லெவனில் இல்லாத மார்னஸ் லபுசேன் தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை பறித்தது வினோதமான கதை!