AUS vs SA.. ஆஸி புதிய சாதனை.. சூப்பர் கிங்ஸ் வீரர் போராட்டம் வீண்.. 17.5 ஓவரில் மீண்டும் மின்னல் அடி.. தென் ஆப்பிரிக்கா ஒயிட் வாஷ்..

0
14296
Australia

ஆஸ்திரேலியா அணி புதிய கேப்டன் மிட்சல் மார்ஸ் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது!

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று அசத்தலாக ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றி இருந்தது!

- Advertisement -

இன்று தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர் டெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மற்றுமொரு துவக்க ஆட்டக்கார ரீஸா ஹென்றிக்ஸ் 30 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். மேத்யூ பிரிட்ஸ்கி ஐந்து ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து கொஞ்சம் பொறுப்பை காட்டிய கேப்டன் எய்டன் மார்க்ரம் 41(23), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25(16), ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் டோனவன் பெரிரா அதிரடியாக 48(21) என குறிப்பிடும்படி ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து கடைசி வரிசையில் இருந்து எந்த ஒரு வீரரும் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பை அளிக்கவில்லை. மேலும் ரன் எடுத்த வீரர்களும் நின்று ஆட வேண்டிய ஆட்டம் இழந்தது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணி சேர்த்தது. இந்தத் தொடர் முழுக்க பந்துவீச்சில் அசத்தி வரும் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் சீன் அப்பாட் நான்கு ஓவர்கள் பந்துவீசி, ஒரு மெய்டன் செய்து, 31 ரன்கள் தந்து, நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் மார்க்ரம் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்ஸ் 15(12), ஜோஸ் இங்கிலீஷ் 42(22), ஸ்டாய்னிஸ் 37(21), டிம் டேவிட் 1(2), ஆஸ்டன் டர்னர் 2(2) என ரன்கள் எடுத்தார்கள்.

கடந்த இரண்டு போட்டியில் தவறவிட்டதற்கு ஒரு முனையில் நின்ற டிராவிஸ் ஹெட் அதிரடியில் தென்னாபிரிக்க அணியை ஒட்டுமொத்தமாக முடக்கி போட்டு விட்டார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 48 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 91 ரன்கள் குவித்தார்.

போட்டியின் முடிவில் 17.5 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என வென்று, தென் ஆப்பிரிக்க அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

தென் ஆப்பிரிக்கா மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியை டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக ஒயிட் வாஷ் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது. மார்ஸ் தலைமையிலான தற்போதைய ஆஸ்திரேலியா டி20 அணியைப் பார்க்கும் பொழுது அடுத்த டி20 உலகக்கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கக்கூடிய அணியாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது!