Asia Cup: பாகிஸ்தான் பெயர் ஏன் இந்திய ஜெர்சியில் இல்லை.. சர்ச்சையை கிளப்பிய பாக். முன்னாள் வீரர்கள்.. உண்மையான காரணம் இதோ.!

0
2762

16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று இலங்கையில் வைத்து நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை இலங்கையிலுள்ள கண்டி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்று தீர்ந்து விட்ட நிலையில் அங்கு நிலவும் மழை காரணமாக போட்டியும் முழுவதுமாக நடைபெறுமா என ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர். பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியின் போதும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வீரர்களின் ஜெர்சியில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை லோகோ மட்டுமே இடம்பெற்று இருந்தது. இந்தப் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் பாகிஸ்தான் தான் இந்த போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர் உரிமையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வீரர்களின் சீருடை பாகிஸ்தான் அணியின் பெயர் இடம்பெறாதது குறித்து அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் முன் வைத்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது வீரர்களின் ஜெர்சியில் வலது பக்கம் இலங்கையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை யுஏஇ நாட்டில் வைத்து நடைபெற்றாலும் அந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ உரிமையை இலங்கை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீரர்களின் ஜெர்சியில் இலங்கை பெயர் அச்சிடப்பட்டிருந்தது. அதேபோல் இந்த வருடம் பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்றிருந்த போதும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்ததால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. எனினும் போட்டியை நடத்த அதிகாரப்பூர்வ உரிமை பெற்ற பாகிஸ்தானின் பெயரை ஏன் ஜெர்சியில் போடவில்லை என ரஷீத் லத்தீப் போன்ற முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்து இருக்கும் ரசீது லத்தீப் ” கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் வீரர்களின் ஜெர்சியில் இலங்கை பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் இந்த வருடம் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானின் பெயர் அச்சிடப்படாதது கடும் கண்டனத்திற்குரியது.போட்டி எங்கு நடைபெற்றாலும் அதற்கான உரிமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது. எனவே பாகிஸ்தானின் பெயர் அதில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக பிசிபி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன காரணங்கள் கூறினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனங்களை தெரிவித்து இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த சர்ச்சை தொடர்பாக பேசியிருக்கும் மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரரான மோசின் கான்” அவர்கள் கூறிய காரணத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை போட்டிகளை நடத்தும் நாட்டின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றால் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியிலும் மலேசியாவில் நடைபெற்ற பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டிகளிலும் போட்டிகளை நடத்தும் நாட்டின் பெயரை ஏன் குறிப்பிட அனுமதித்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதே கருத்து தொடர்பாக பேசியிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் வீரர் ஒருவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவை குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் பெயர் தங்களது ஜெர்சியில் அச்சிடப்படுவதை விரும்பாமல் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் என அவர் குற்றம் சாட்டியிருக்கிறார் .

இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து வரும் நிலையில் ஆசியக் கோப்பை போட்டிகளில் ஏன் பாகிஸ்தானின் பெயர் இடம் பெறவில்லை என்பதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் இலங்கையில் நிலவிவந்த சூழ்நிலை காரணமாக அந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வீரர்களின் ஜெர்சியில் இலங்கையின் பெயரே அச்சிடப்பட்டிருந்தது . இது கடந்த ஆண்டு பல குழப்பங்களை ஏற்படுத்தியதால் ஆசியக் கோப்பை போட்டிகளின் போது வீரர்களின் சீருடை நடத்தும் நாடுகளின் பெயர்களை பதிவிட வேண்டாம் என முடிவு எடுத்ததாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது. இதுதான் உண்மையான காரணம் எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நடத்தும் மிகப்பெரிய ஒரு கிரிக்கெட் தொடரில் தங்களது பெயர் பதிவு செய்யப்படுவதற்கு பிசிபி நிர்வாகிகள் குரல் எழுப்பி இருக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.