இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 7 விக்கெட்ஸ் எடுத்து ரெக்கார்ட் படைப்பு… ஜட்டு, அஸ்வின் சுழலில் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வி!

0
1465

இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் ஏழு விக்கெட்டுகள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 130 ரன்களுக்குள் சுருட்ட உதவினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி முதற்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டாமினிகா தீவில் உள்ள மைதானத்தில் நடத்தப்பட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் இருவரும் ஓபனிங் இறங்கி 229 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதில் ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அவுட் ஆனார். தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து வந்த ஜெய்ஸ்வால் 171 ரன்கள் அடித்து பல சாதனைகளை படைத்தார்.

நன்றாக விளையாடிவந்த விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, துரதிஷ்டவசமாக 76 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்த அதிகபட்சமாக ஜடேஜா 37 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளர் செய்யப்பட்டது.

- Advertisement -

271 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே தட்டுதடுமாறி விளையாடி வந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகளை ஜடேஜா எடுத்து கதவை திறந்து விட்டார்.

அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சூழலில் சிக்கி சின்னாபின்னமான வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.