நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் எந்த ஆண்டு இல்லாத வகையில் நிறைய சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆண்டாக இருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பந்துவீச்சாளர்கள் பெரிய சிரமத்தை சந்தித்தார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டி அனில் கும்ப்ளே தன்னுடைய யோசனையைக் கூறி இருக்கிறார்.
2024, 17வது ஐபிஎல் சீசனில் முதல் பாதியில் ஆடுகளங்கள் தட்டையாக இருந்தது, மேலும் மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருந்தது. இத்தோடு இம்பேக்ட் பிளேயர் விதியும் சேர்ந்து கொள்ள, பேட்மேன்களுக்கு சூழ்நிலை சொர்க்கமாக மாறியது.
இதன் காரணமாக சர்வ சாதாரணமாக 250 ரன்கள் அணிகள் அடித்து நொறுக்கின. எல்லா அணியில் இருந்த பந்துவீச்சாளர்களும் என்ன செய்வது என தெரியாமல் மைதானத்தில் தடுமாறி நின்றார்கள். பந்துவீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் நிறைய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அனில் கும்ப்ளே கூறும்பொழுது “இது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது குறிப்பாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி மிகுந்த சிரமத்தை கொடுத்தது. இந்தியாவில் இருக்கும் எல்லா மைதானத்தின் எல்லைகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி எல்லையை அதிகரித்து முயற்சி செய்யப்பட வேண்டும்.
இதற்கு முதல் கட்டமாக, பவுண்டரி எல்லையை ஒட்டி அணியினர் அமர்ந்திருக்கும் டக்அவுட்டை நீங்கள் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு நகரத்தலாம். மேலும் இதனால் சில இருக்கைகளை இழக்க நேரிடும். ஆனாலும் கூட அந்த இருக்கைகள் அப்படியேதான் இருக்கும். மேலும் பந்தின் தையல் கொஞ்சம் பெரிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது, பந்தில் கொஞ்சம் அசைவு இருப்பதற்கு உதவி செய்யும்.
இதையும் படிங்க : மழையால் நின்ற போட்டி.. ப்ளே ஆஃப்க்கு சென்ற ஹைதராபாத்.. சிஎஸ்கே-வின் 2வது இட வாய்ப்புக்கு சிக்கல்
தற்பொழுது ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு பந்து ஸ்விங்ஆவது நின்று விடுவதை நாம் பார்த்து வருகிறோம். நமக்கு பேட்டுக்கும் பந்துக்கும் நடுவில் சம நிலையான போட்டி தேவைப்படுகிறது. எனவே நாம் இத்தகைய மாற்றங்களை செய்தாக வேண்டும். இல்லையென்றால் சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் அணிவகுத்து நிற்க மாட்டார்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.