இசாந்த் சர்மாவின் டோ யார்க்கர்.. குப்புற விழுந்த ரசல்.. ஆனாலும் எழுந்து கைத்தட்டி பாராட்டு

0
1337
Russell

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிய அளவில் ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த சுனில் நரைன் அதிரடியாக 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்ய வந்த 18 வயதான இளம் வீரர் அங்கிரிஸ் ரகுவன்சி 27 பந்தில் அதிரடியாக 54 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் விட்ட இடத்தில் இருந்து ஸ்கோரை அதிரடி ஆட்டக்காரர் ரசல் எடுத்துச் சென்றார். 18 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து, இசாந்த் சர்மா வீச வந்த கடைசி ஓவரை எதிர்பார்த்து பேட்டிங் முனையில் நின்றார்.

இதற்கு முன்பாக இரண்டு ஓவர்கள் வீசி இருந்த இஷாந்த் சர்மா மொத்தம் 35 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். எனவே இந்த கடைசி ஓவரில் ரசல் அதிரடியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் குவித்த அணியாக மாறும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.

இந்த நிலையில் இருபதாவது ஓவரின் முதல் பந்தை ரசலுக்கு கால் பாதத்தை குறி வைத்த டோ யார்க்கர் ஒன்றை இசாந்த் சர்மா அசத்தலாக வீசினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரசல் கிரீசில் தடுமாறி விழுந்து கிளீன் போல்ட் ஆனார். ஆனால் எழுந்த ரசல் “இந்த நேரத்தில், இந்த வயதில் இப்படி ஒரு பந்தா!” என வியந்து இஷாந்த் சர்மாவை கைத்தட்டி பாராட்டி விட்டு சென்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீர் கொண்டுவந்த 18 வயது பையன்.. 25 பந்தில் அரைசதம்.. யார் இந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி?

2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 1.10 கோடி ரூபாய்க்கு இதே டெல்லி அணிக்கு இஷாந்த் சர்மா விளையாடினார். 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் இவரை எந்த அணிகளும் வாங்கவில்லை. கடந்த ஆண்டு டெல்லி அணி மீண்டும் இவரை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. கடந்த ஆண்டும் டெல்லி அணிக்கு இரண்டு ஆட்டங்களை பந்துவீச்சில் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.