இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கடந்த வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் உடன் அணி ஊழியர் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் பெயர் ராகவேந்திரா. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை மெருகேற்றுவதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கும் அவர் யார்? என்று பார்க்கலாம்.
இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிநாடுகளில் குறிப்பாக அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் கொண்ட தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சிறப்பாக விளையாடுவதற்கு, இந்த ராகவேந்திரா என்கின்ற ரகு மிக முக்கியமானவராக இருக்கிறார். இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என்றால் கிடையாது.
இவர் த்ரோ டவுன் எனப்படும் கையைப் பயன்படுத்தி பந்தை எறிந்து பேட்ஸ்மேன்கள் பேட்டிங் பயிற்சி செய்வதற்கு உதவக் கூடியவர். இவருடைய சிறப்பு என்னவென்றால் வெறும் கைகளால் பந்தை அதிகபட்ச வேகத்தில் எறிய முடியும். மேலும் தேவையான பவுன்ஸ் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும். அத்தோடு பேட்ஸ்மேன்கள் விரும்புகின்ற இடத்தில் துல்லியமாகப் பந்தை எறிந்து சரியான பயிற்சியைக் கொடுக்க முடியும்.
2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இவர் இணைந்தார். பிறகு 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இவருக்கு இந்திய அணியில் த்ரோ டவுன் பயிற்சியாளராக பொறுப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் சச்சினுக்கு இவர் அதிக நேரம் பந்தை எறிந்து பயிற்சி பெற உதவி செய்திருந்தார்.
இவர் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கும்கா பகுதியைச் சேர்ந்தவர். மேலும் சிறுவயதிலிருந்தே பந்துவீச்சாளராகும் இவரதுமுயற்சியை, பள்ளி ஆசிரியரான இவர் தந்தை விரும்பவில்லை. ஆனாலும் இவர் தனியாக முயன்று, ஹூப்ளியில் தங்குவதற்கு இடம் இல்லாமல், குடும்பத்தின் ஆதரவின்றி பேருந்து நிலையத்திலும், அனுமன் கோவிலிலும் இறுதியாக கல்லறையிலும் கூட தங்கியிருந்து தார்வாட் மண்டல அணிக்காக விளையாடினார்.
இதையும் படிங்க : 32 பந்து 50 ரன்.. உத்தப்பா அதிரடி.. ஹர்பஜன் அதிரடி சிக்ஸில்.. இந்தியா சாம்பியன்ஸ் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தியது
பிறகு இவருக்கு கையில் ஏற்பட்ட ஒரு காயம் கிரிக்கெட் வந்து வீச்சாளர் வாழ்க்கையை சோகமாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. பிறகு சம்பளமே இல்லாமல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் வேலை செய்திருக்கிறார். அங்கிருந்துதான் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்து, 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் ஆக வந்தார். 13 ஆண்டுகள் கடந்த பின்னும், இவரது த்ரோ டவுன் திறமையின் காரணமாக, இந்திய அணியில் தொடர்கிறார். மேலும் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் இவர் என்பது குறிப்பிடத்தக்கது!






