23 ரன்களுக்கு ஆல் அவுட்.. தீபக் சகரின் மிகப்பெரிய உலகச் சாதனையை உடைத்த மலேசிய பவுலர்!

0
14298
Deepak

டி20 கிரிக்கெட்டின் வருகை கிரிக்கெட்டை அழித்துவிடும் என்று பலர் அஞ்சினார்கள். மேலும் அதற்கு தகுந்தாற்போல் ஒருநாள் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் அழித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்!

அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்தான் இதுவரை கிரிக்கெட் சென்று சேராத நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சென்று இருக்கிறது. தற்பொழுது ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள அணி நிர்வாகங்கள், அமெரிக்க எம்எல்சி டி20 லீக்கில் அணிகளை வாங்கி டி20 தொடரை நடத்தும் அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இதற்கு அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்க இருக்கிறது. மேலும் இதில் சில போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெறலாம்.

இந்த நிலையில் கிரிக்கெட் விளையாடும் கண்டங்களின் அடிப்படையில் இருந்து, அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான தனித் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு சிறிய கிரிக்கெட் நாட்டு அணிகள் பங்கு பெறுகின்றன.

இதில் நேற்று ஆசியக்கண்டத்தில் இருந்து அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மலேசிய அணியும் சீன அணியும் மோதிக்கொண்டன.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற சீன அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்த முடிவுக்காக சீன அணி பல ஆண்டுகள் வருத்தப்படும் அளவுக்கான வேலையை, மலேசியாவின் வேகப்பந்துவீச்சாளர் சியாஸ்ரூல் இட்ரஸ் தனது பந்துவீச்சின் மூலம் செய்தார்.

நேற்று அவர் சீன அணிக்கு எதிராக 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்கின்ற உலகச் சாதனையைப் படைத்தார். மீதம் இருந்த மூன்று விக்கெட்டுகளை பவன் தீப் சிங் இரண்டு விக்கெட், விஜய் உன்னி ஒரு விக்கெட் என பகிர்ந்து கொண்டார்கள்.

முடிவில் சீன 11.2 ஓவரில் 23 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெய் குலேய் (7), வாங் லியுயாங் (3), தியான் சென்குன் (0), சென் ஜுயோயு (0), வாங் குய் (0), சீ குன்குன் (0) மற்றும் ஜாவோ தியான்லே (0) என ஏழு பேர் இட்ரஸ் பந்துவீச்சில் காலியானார்கள். மலேசிய அணி 4.5 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் ஐந்து பந்துவீச்சாளர்கள் :
சியாஸ்ருல் இட்ரஸ் – 7/8
பீட்டர் அஹோ – 6/5
தீபக் சகர் – 6/7
தினேஷ் நக்ரனி – 6/7
அஜந்தா மெண்டிஸ் – 6/8