தற்போது ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கு என தனியாக ஒரு டி20 லீக்கை நடத்த விரும்புகின்றன. இந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் உலகின் முதல் நிலை டி20 லீக்காக இருந்து வருகிறது. தற்பொழுது ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட முறை ஒழிக்கப்பட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறையும் மெகா ஏலம் நடைபெறுகிறது. இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மினி ஏலம் நடத்தப்படுகிறது. இந்த வருடம் மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அணி உரிமையாளர்கள் கூட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அதில் பெரிய அணிகள் மெகா ஏலம் கூடாது எனவும், சிறிய அணிகள் கட்டாயம் மெகா ஏலம் வேண்டும் எனவும் கேட்டதாக செய்திகள் வந்தது. பொதுவான கருத்தாக ஆண்டுக்கு ஆண்டு மினி ஏலம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெரிய அணிகள் இளம் திறமைகள் மீது முதலீடு செய்து உருவாக்கி வைத்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடக்கின்ற காரணத்தினால் அவர்கள் உருவாக்கும் வீரர்களை விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் சிறிய அணிகள் எந்த புதிய வீரர்களையும் உருவாக்காமல், தொடர்ந்து மெகா ஏலத்தை விரும்புகின்றன.
இதுகுறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சில அணி உரிமையாளர்கள் ஐபிஎல் தொடரில் ரீசெட் பட்டனை அழுத்தவில்லை என்றால் நாங்கள் எப்படி புதிய அணியை உருவாக்குவது? என்று கேட்கிறார்கள். தற்போது அவர்களுக்கு இருக்கும் அணியை வைத்து வெற்றி பெற முடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். எனவே ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தை விரும்புகிறார்கள்.
இந்த விருப்பத்தை சிறிய அணிகளாக இதுவரை வெற்றி பெறாமல் இருந்து வரும் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தெரிவித்திருக்கலாம். ஆனால் இதுவரையில் தொடர்ச்சியாக மெகா ஏலம் நடைபெற்று வந்த நிலையில், இவர்கள் சரியான அணியை தேர்ந்தெடுத்து வெற்றி பெறாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நாளையும் மெகா ஏலம் தொடர்ந்து நடைபெற்றால் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய தொடருக்கு மாஸ் பிளான்.. ஆப்கான் இலங்கை டெஸ்ட்டுக்கு நியூசி அணி அறிவிப்பு.. 4 சிறப்பு வீரர்கள்
மேலும் பெரிய அணிகள் இளம் வீரர்கள் மேல் முதலீடு செய்து உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து வெகா ஏலம் நடந்து கொண்டிருந்தால் அவர்கள் இப்படியான வீரர்கள் மேல் முதலீடு செய்வதை நிறுத்தி விடுவார்கள். எனவே இந்த மெகா ஏல முறை ஐபிஎல் தொடரில் நிறுத்தப்பட வேண்டும்” என கூறி இருக்கிறார்.