ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனேவை நீக்கியுள்ளது. இந்த முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத் தனது அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். கோப்பைகளை வென்று தந்த பயிற்சியாளர்களைப் பலிகடாவாக்குவது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கடந்த காலங்களில் மஹேலா ஜெயவர்த்தனேவின் வழிகாட்டுதலின் கீழ் மும்பை அணி மூன்று முறை கோப்பைகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால், கடந்த ஐபிஎல் சீசனில் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு அவரை மட்டும் முழுப் பொறுப்பாக்குவது சரியல்ல. முன்னணி வீரர்கள் சிறப்பாகச் செயல்படாததற்குக் கூட பயிற்சியாளரைக் குற்றம் சாட்டுவது முறையான அணுகுமுறை அல்ல என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பத்ரிநாத் பேசும்போது “அவர் எம்ஐ அணிக்காக மிகவும் அற்புதமாகச் செயல்பட்டு மூன்று முறை கோப்பைகளை வென்று தந்துள்ளார். ஆனால், சமீபத்திய சரிவிற்காக அவரைப் பலிகடாவாக்கி விட்டார்கள். இதற்கு மேல் அவர் என்ன செய்திருக்க முடியும்? அவர்களிடம் மிகச்சிறந்த அணி இருந்தது. ஹார்திக் பாண்டியா எப்படி பந்துவீச வேண்டும் என்றோ, ரோகித் சர்மா எப்படி புல் ஷாட் ஆட வேண்டும் என்றோ அல்லது பும்ரா எப்படி யார்க்கர் வீச வேண்டும் என்றோ அவரால் சொல்லிக் கொடுக்க முடியுமா? அவர்கள் அனைவரும் ஏற்கனவே proven performers ஆவர்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “எப்போது ஒரு ஃபிரான்சைஸ் அணியில் மாற்றம் செய்ய விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பயிற்சியாளர் தான் பலிகடாவாக்கப்படுகிறார். இதே போன்ற ஒரு நிலைமைதான் சிஎஸ்கே அணியிலும் ஸ்டீபன் பிளெமிங்கிற்கு நடந்தது. மஹேலா மற்றும் பிளெமிங் ஆகிய இருவருமே பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே மற்றும் எம்ஐ ஆகிய இரண்டு அணிகளுமே கடந்த சில சீசன்களாக சரியான லீடர்ஷிப் இல்லாமல் தடுமாறி வருகின்றன” என்று கூறி இருக்கிறார்.