நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அக்டோபர் மாதம் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரையில் விளையாடுகிறது. ஆப்கான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு சில சிறப்பு திட்டங்கள் உடன் அணியை தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறது.
இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட நியூசிலாந்து அணி அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகள் அக்டோபர் 26 மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதியில் புனே மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் நடைபெறுகிறது. தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதால், இரண்டு அணிகளுக்குமே மிக மிக முக்கியமான தொடராக இது அமையும்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நியூசிலாந்து அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு செப்டம்பர் 18 மற்றும் 26 ஆம் தேதியில் இலங்கை சென்று அந்த அணிக்கு எதிராக காலே மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
தற்பொழுது ஆப்கான் மற்றும் இலங்கை தொடர்களுக்கு 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்திருக்கிறது. இதில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் அஜாஸ் படேல், மிட்சல் சான்ட்னர், ரச்சின் ரவீந்தரா மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் என நான்கு சுழல் பந்து வீச்சாளர்களை அறிவித்திருக்கிறது. இதில் அஜாஸ் படேல் தவிர மூவரும் ஆல் ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணிக்கு கேப்டனாக டிம் சவுதி தொடர்கிறார். மேலும் மேட் ஹென்றி, வில் ஓ’ரூர்க், பென் சியர்ஸ் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். கேன் வில்லியம்சனும் அணியில் இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடருக்கு ஒத்திகை பார்ப்பதற்கு நான்கு சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டு நியூசிலாந்து சிறந்த திட்டத்துடன் வந்திருக்கிறது.
இதையும் படிங்க : 113 மீட்டர்.. 4 பந்துக்கு ஒருமுறை 1 சிக்ஸ்.. நிக்கோலஸ் பூரன் ருத்ர தாண்டவம்.. இங்கிலாந்து 100 பந்து போட்டி
ஆப்கான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி :
டிம் சவுத்தி (கே), டாம் ப்ளூண்டல் (வி. கீ), மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, மாட் ஹென்றி, டாம் லாதம் (வி.கீ), டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.