“ஸ்ரேயாஸ் ஐயர் உலக கோப்பை அணியில் இருப்பாரா.?” – அஜித் அகர்கர் தெளிவான விளக்கம்.!

0
292

உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் வைத்து நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி இரண்டாவது போட்டி இந்தூரிலும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரிலும் நடைபெற உள்ளது.

இதற்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு குழு இன்று வெளியிட்டது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆசியக் கோப்பையில் காயம் அடைந்த அக்சர் பட்டேல் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. நீண்ட நாட்களாக இந்திய ஒரு நாள் அணியில் விளையாடாமல் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்தார். அவருக்கு பதிலாக களம் இறங்கிய கேஎல் ராகுல் சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தப் போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதன் பிறகு நடைபெற்ற ஆசிய கோப்பையின் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. மேலும் அவர் ஆசிய கோப்பை போட்டிகளுக்கு முன்பாக காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த அவர் இரண்டு மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தார். இதன் காரணமாக அவருக்கு ஆசிய கோப்பை அணியில் இடம் கிடைத்தது. தற்போது மீண்டும் காயம் காரணமாக போட்டியில் விளையாடாத நிலையில் உலகக்கோப்பை அணியில் அவரது இடம் குறித்த சந்தேகம் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்க்கர் உலகக்கோப்பையில் ஸ்ரேயா செய்யர் பங்கேற்பார் என்பதை உறுதி செய்து இருக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் தான் இருக்கிறார் என்றும் அவரது காயம் தீவிரமானதாக இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் அவரை தேர்வு செய்திருக்க மாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அகர்கர் ” ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக இருக்கிறார். அவருக்கு ஸ்ட்ரெஸ் பிராக்சர் ஏற்படவில்லை. லேசான காயம் தான் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மற்றும் பில்டிங் நன்றாக செய்கிறார். அவரது காயம் தீவிரமானதாக இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அவரை தேர்வு செய்திருக்க மாட்டோம். இந்த மூன்று போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர்” கடந்த பல மாதங்களாக அவர் தனது உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஏற்பட்ட காயம் சிறிய அளவிலேயே இருந்தது. அவர் இந்த மூன்று போட்டிகளையும் சிறப்பாக கடக்க வேண்டும். நிச்சயமாக அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது அவரது உடல் தகுதி பற்றி கவலைப்பட தேவையில்லை அவர் நன்றாகவே இருக்கிறார்” என கூறி முடித்தார் அஜித் அகர்கர்.