டி20 யில் அதிர்ச்சி..பாகிஸ்தானை பொளந்து கட்டிய ஆப்கான்.. இவ்வளவு கம்மியான ஸ்கோரா?

0
8002

பாகிஸ்தான மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்று டி20 போட்டிகள் சார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. சதப் கான் தலைமையில் விளையாடிய பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கடைசி ஆட்டம் ஆசிய கோப்பையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. இதனால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் வீரர்களை ஒழுங்காக நடந்து கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வற்புறுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேதி கூறியது ஆப்கானிஸ்தான் வீரர்களை கடுப்படைய செய்தது.

இந்த நிலையில் போட்டி தொடங்கியதும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அபாரமாக பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களை ஓட விட்டனர். தொடக்க வீரர் சயூம் அயூப் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அதன் பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் சறுசறுவென விழுந்தன .பி எஸ் எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆசாம் கான் உள்ளிட்ட வீரர்கள் போட்டியில் களமிறங்கி டக் அவுட் ஆனது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

பாகிஸ்தான் வீரர்கள் களத்திற்கு வந்த வேகத்தில் திரும்பிச் சென்றதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது.  இது சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அடித்த ஐந்தாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்களும் முதலில் தடுமாறினர்.

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்த்து ஆப்கானிஸ்தான் வீரர் அடுத் தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் போட்டியில் அனல் பறந்தது.  எனினும் அந்த அணியின் நட்சத்திர முகமது நபி பொறுப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதிகபட்சமாக முகமது நபி 38 ரன்களும், நஜிபுல்லா 17 ரன்களும் அடித்தனர்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 17.5 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் பாகிஸ்தானை முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி ஜெயித்திருக்கிறது .