தற்போதைய கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அணிகளுள் முக்கியமான அணி ஆப்கானிஸ்தான் அணி. கடந்த 3, 4 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த அணி எட்டியுள்ளது. ரஷித் கான், குர்பாஸ், முகமது நபி போன்ற அந்நாட்டைச் சேர்ந்த எத்தனையோ வீரர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று டி20 கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த அணி குறுகிய காலத்தில் எட்டி உள்ளது. அந்த நாட்டில் அரசியல் ரீதியாக பல பிரச்சனைகள் கிரிக்கெட்டுக்கு இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிக்காட்டி வருகின்றனர். கடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு சவால் விடும் நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி தற்போது அடுத்து என்னென்ன தொடர்கள் விளையாடப் போகிறோம் என்பதை அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் நெதர்லாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருடன் தங்களது இந்த பயணத்தை ஆப்கானிஸ்தான் அணி தொடங்குகிறது. அதன்பிறகு ஜிம்பாவே, வங்கதேசம், அயர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பல நாடுகளுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் விளையாட திட்டமிட்டுள்ளது. ஜிம்பாவே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஆப்கானிஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த காலகட்டத்தில் இரண்டு ஆசிய கோப்பை தொடர்களிலும் ஒரு டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது. 2023 வரை முப்பத்தி ஏழு ஒருநாள் போட்டிகளிலும் 12 டி20 போட்டிகளிலும் விளையாட ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதால் அதற்கு ஏற்றவாறு அதிக ஒருநாள் போட்டிகளில் போதிலிருந்தே ஆப்கானிஸ்தான் அணி கவனம் செலுத்த உள்ளது.
பல உலகத் தரம் வாய்ந்த அணிகளை அடிக்கடி அதிர்ச்சி தோல்விகளால் தாக்கும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது அதிக போட்டிகள் விளையாடுவதன் மூலம் நன்கு பயிற்சி எடுத்து உலக கோப்பை தொடரை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.