சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்!
80களின் கடைசியில் தொழிற்புரட்சியின் வாயிலாக 90களில் இந்தியா நவீனமயமாதலின் முதற்புள்ளியில் நின்றுகொண்டிருந்தது. அப்பொழுதுதான் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் வீடுகளுக்குள் தொலைக்காட்சி எட்டிப்பார்க்க ஆரம்பித்ததிருந்தது.
இந்த நிலையில் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 83-ல் உலகக்கோப்பையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வென்று, இந்திய மக்களிடம் ஓரளவுக்குப் பரவலாக்கி வைத்திருந்தது. ஆனால் அதற்குப் பிறகு இந்திய அணிக்குப் பெரியளவில் எந்த வெற்றிகளோ, சிறப்பான ஆட்டக்காரர்களாகவோ அமையவில்லை. உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி அழகு பார்த்தது இந்திய அணி நிர்வாகம்.
இந்த நிலையில்தான் சிறுவர் பருவத்திற்கும் வாலிப பருவத்திற்கும் மத்தியில் பதினைந்தரை வயதில் பால் வடியும் முகத்தோடு ஒருவர் இந்திய கிரிக்கெட்டில் 1989ல் அறிமுகமாகி, தன் முதல் தொடரான பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின், நான்காவது சியால்கோட் டெஸ்ட் போட்டியில் கதாநாயகன் ஆகிறார்.
அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டை சச்சினுக்கு முன் சச்சினுக்கு முன் என்று பிரிக்கும் அளவுக்கு, தன் அதியுயர் பேட்டிங் தொழிற்நுட்பத்தால் இந்தியா தாண்டி உலகக் கிரிக்கெட் இரசிகர்களையும் கட்டிப்போட்டு ஆள்கிறார். தனியொரு மனிதனாக இந்தியாவில் மின்சாரம் நுழையாத குக்கிராமங்கள் வரை கிரிக்கெட்டை எடுத்துச் செல்கிறார். அடுத்து இந்திய கிரிக்கெட்டிற்குள் நுழைய ஆசைப்பட்டவர்களிலிருந்து, சாதாரணமாக பேட் டை தொட்டவர்களுக்கு வரை சச்சின்தான் முன்மாதிரி!
1989ல் பாகிஸ்தானில் அறிமுகமாகி 2013ல் மும்பை வான்கடேவில் ஓய்வுப்பெறும் வரை, இடைப்பட்ட 24 ஆண்டுகளில், கிரிக்கெட் விளையாட்டு என்பதை, கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங் என்பது ஒரு கலையென்று காட்டி, ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டின் அடையாளமாக, சிறப்புத் தூதுவராக நின்று ஆண்டவர்!
இன்று உலக கிரிக்கெட்டின் சிறப்பு அடையாளமான, மதிப்புமிக்க சிறப்பு தூதுவரான சச்சின் அவர்களின் பிறந்த தினம். அவர் நீண்டு நலமாக, வளமாக வாழ நம் சார்பில் பிறந்ததின வாழ்த்துக்கள்!