பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள 4 அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடி இருக்கின்றன. அதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. அதேபோல் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் முதல் 2 இடங்களில் உள்ளன. இதன்பின் 3வது இடத்தில் வங்கதேசம், 4வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளது. இந்திய அணி அடுத்த போட்டியில் பிப்.23ல் பாகிஸ்தான் அணியை எதிர்த்தும், மார்ச் 2ல் நியூசிலாந்து அணியை எதிர்த்தும் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் அணி பின்னடைவு
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியில் மோசமான தோல்வியை அடையாமல் இருந்தாலே, அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம்.
ஏனென்றால் பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், நெட் ரன் ரேட்டில் மிகவும் பின் தங்கி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த 2 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி குறித்து கனவு காண முடியும். அப்போதும் கூட நியூசிலாந்து அணியின் வெற்றி தோல்வியை கருத்தில் கொண்டே அரையிறுதி வாய்ப்பு அமையும்.
இந்திய அணிக்கு 2ல் 1
2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் மோதுவதால், இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.
இதையும் படிங்க: கோலியை அவுட் செய்ய.. பெயர் இந்த எழுத்திலும் அந்த வகை பவுலரா இருந்தா போதும் – ஆகாஷ் சோப்ரா வினோத கருத்து
அதேபோல் இந்திய அணி வெற்றிபெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும். இதனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை இரு நாடுகளின் ரசிகர்களும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். ஒருவேளை இந்திய அணி தோல்வியடைந்தால், நியூசிலாந்து போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும்.






