2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் இந்திய அணி ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தான் அணியை வெல்லும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் மைதானத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு இருநாட்டு ரசிகர்களிடமும் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலை வருகிறது. மேலும் இந்த போட்டி நடைபெற இருக்கும் தொடரின் மிக முக்கியமான போட்டியாகவும் இருக்கிறது.
புள்ளி விபரங்களை நீங்கள் பார்க்கலாம்
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “இரண்டு நாடுகளும் விளையாடும் போட்டி குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். இந்த போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்து முத்தரப்பு தொடரை இழந்திருக்கிறது. மேலும் புள்ளி விபரங்களை எடுத்து வைத்து பார்க்கும் பொழுது அதில் தெளிவாக இந்திய அணி மேலே இருக்கிறது”
“பொதுவாக நாம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பையில் மோதிக்கொண்ட பழைய போட்டிகளை வைத்து கூறுகிறோம் என்பது உண்மைதான். கிரிக்கெட்டை பொருத்தவரையில் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்பதும் உண்மைதான். ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பெரிய அணியாக இருக்கிறது. அவர்களுக்கு பாபர் மற்றும் ரிஸ்வான் தவிர வேறு யாரும் இல்லை”
ஒரு தலைப்பட்சமாக இந்தியா வெல்லும்
“ரிஸ்வான் கேப்டன்சி நன்றாக இருக்கிறது. மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் மற்றவர்களிடமிருந்து அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. சல்மான் முத்தரப்பு தொடரில் சதம் அடித்திருக்கிறார். மற்றபடி அவர்களுடைய முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள்”
இதையும் படிங்க : ஒரு கோப்பை.. 2 பைனல்.. ஐசிசி விதியால் கலைந்த கங்குலியின் கனவு.. 2002 சாம்பியன்ஸ் டிராபி ஒரு பார்வை
“எனவே எல்லா அடிப்படையில் இந்திய அணி முன்னால் இருக்கிறது. மேலும் மிகைப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி ஒரு தலைப்புச்சமாக பாகிஸ்தான் அணியை வெல்லும். மேலும் டிக்கெட்டுகள் மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் நினைப்பது போல இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக ஒன்றும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.






