ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளதால், இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்றாலே இந்திய ரசிகர்களின் மூளை நேராக 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்லும். ஏனென்றால் ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக நடைபெற்ற அந்த ஆட்டத்தால், இந்திய அணி வேறு வழியின்றி இலங்கை அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
2 முறை நடந்த இறுதிப்போட்டி
அந்த போட்டியில் இந்திய அணி இரு முறை வெல்வதற்கு வாய்ப்பு வந்த போதும், மழை குறுக்கிட்டு கங்குலியின் கனவை நாசமாக்கியது. அதேபோல் 2 நாட்கள் நடந்த இறுதிப்போட்டிக்கு பின் என்ன காரணம் என்பது இன்னும் ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொறுத்தவரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருந்தாலும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதன்பின் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணி ஜெயசூர்யாவின் அபார அரைசதத்தால் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதன்பின் இந்திய அணி களமிறங்கி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் மழை நிற்காமல் பெய்தது.
2வது நாளிலும் இலங்கை பேட்டிங்
இதனால் இந்திய இன்னிங்ஸை அடுத்த நாளுக்கு மாற்றப்படாமல் மீண்டும் மொத்த ஆட்டத்தையும் அடுத்த நாளுக்கு ஐசிசி தள்ளி வைத்தது. இதன்பின் 2வது நாளில் தொடங்கிய இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி முதல் பேட்டிங்கை ஆடியது. இந்த முறை ஜெயவர்தனேவின் அரைசதம் காரணமாக இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்தது.
இதன்பின் எளிய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 8.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், ஆட்டம் மழையால் நின்றது. மழை நிற்காததன் காரணமாக இரு அணிகளுக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. மொத்தமாக இந்த போட்டியில் 110.4 ஓவர்கள் வீசப்பட்டிருந்தது.
2வது நாளில் இந்திய அணி நேராக பேட்டிங் களமிறங்கி இருந்தால் எளிதாக வெற்றியாளரை தீர்மானித்திருக்க முடியும். ஆனால் மீண்டும் இறுதிப்போட்டி நடக்கும் என்று ஐசிசி விதியின் காரணமாக அறிவிக்கப்பட்டதால், அந்த இறுதிப்போட்டி இன்று வரை கங்குலி ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அன்று இந்தியா வென்றிருந்தால், ஐசிசி கோப்பையை இந்திய கேப்டன் பட்டியலில் கங்குலி சேர்ந்திருப்பார்.