அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தங்களுக்கான வீரர்களை வாங்கிய நிலையில் மீதம் இருந்த பணத்தில் சில வீரர்களை மட்டுமே தேர்வு செய்தது.
இந்த திட்டம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 25.20 கோடி ரூபாய்க்கு எடுத்துக்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28.40 கோடி ரூபாய்க்கு இந்திய இளம் வீரர்களை எடுத்து ஆச்சரியப்படுத்தியது. இதில் நேற்று கலந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடி ரூபாய்க்கு தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாகை திரும்பவும் தங்கள் அணிக்கு எடுத்துக் கொண்டது. மேலும் சிறிய தொகைக்கு சில வீரர்களை எடுத்து தங்கள் அணியை மேலும் பலப்படுத்திக் கொண்டது.
அதாவது மினி ஏலத்திற்கு முன்பே தங்களுக்கான வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றம் செய்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஏலத்தில் பெரிதும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். மேலும் இதற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி புத்திசாலித்தனமாக தங்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் நேற்று மினி ஏலத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது செய்ததை பார்த்தால் பல அணிகள் இனி அவ்வளவாக ஐபிஎல் மினி ஏலத்தை விரும்பாமல் போகலாம். மும்பை இங்கு வருவதற்கு முன்பாகவே ஏறக்குறைய தங்கள் அணியை முழுமையாக உறுதி செய்து விட்டனர். இது மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை ஏனென்றால் ஏலத்திற்கு செல்லும் போது யாரை எடுக்கலாம்? யாரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து முழுமையான விபரம் கிடைக்காது.
இதையும் படிங்க:தோனி இடத்துக்கு சஞ்சு சாம்சன் கிடையாது.. சாதனை விலை கார்த்திக் சர்மாதான்.. என்ன காரணம்?
மயங்க் மார்க்கண்டே, ஷர்துல் தாக்கூர் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டதன் மூலமாக மும்பை அணி தங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார். மேலும் நேற்று ஏலத்தின் மூலமாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை நிறைவு செய்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.






