பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சரிந்து விழுந்த தென் ஆப்ரிக்கா
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் 70 பந்துகளில் 53 ரன்கள், லுகான் பிரிட்டோரியஸ் 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 72 ரன் கொடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணிக்கு வலிமையான தொடக்கம் கிடைத்தது.
இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா கொத்தாக அப்படியே சரிந்தது. 72 ரன்னுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த தென் ஆப்பிரிக்கா, அங்கிருந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் தொடரை வென்றது
இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் வந்த பாபர் அசாம் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : அந்த இந்திய பவுலர்தான் எனக்கு ரொம்பவே சவால் கொடுப்பாரு.. அவரை எதிர்கொள்ளவே முடியாது – தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான்
இதைத் தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சையும் ஆயுப் அதிரடியாக 70 பந்துகளில் 77 ரன்கள், முகமது ரிஸ்வான் 45 பந்துகளில் 32 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுக்க, பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 25.1 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியது.






