99 ரன் 10 விக்கெட்.. இங்கிலாந்தை அதிரடியாக சுருட்டி வீசியது இந்தியா.. அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி!

0
977
ICT

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி உத்தரபிரதேசம் லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்த முறை இந்திய அணிக்கு சிறந்த துவக்கம் கிடைக்கவில்லை. கில் 9 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் இல்லாமலும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும் உடனுக்குடன் வெளியேற இந்திய அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது.

இந்த நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாகவும் அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படும் பொழுது ரன்களையும் கொண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஆட்ட சூழ்நிலையை புரிந்து விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்த. அவருடன் சேர்ந்து விளையாடிய கேஎல்.ராகுல் அவசரப்பட்டு ஒரு தவறான ஷாட்டுக்கு போய் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட் இந்திய பெரிய அழுத்தத்தை உருவாக்கி விட்டது. இந்த ஜோடி 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்த சதத்தை நோக்கி விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து ஜடேஜா 8, சமி 1 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இறுதிக்கட்டத்தில் அணியை காப்பாற்றும் விதமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். களத்தில் ஆட்டம் இழக்காமல் பும்ரா 16*, குல்தீப் யாதவ் 9 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 3, வோக்ஸ் மற்றும் ஆதில் ரசித் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த இங்கிலாந்து அணி கொஞ்சம் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தது. இதற்குப் பிறகு பும்ரா டேவிட் மலானை 16 ரன்களில் வெளியேற்றி, அடுத்த பந்தில் உடனே ஜோ ரூட்டை ரன் ஏதும் இல்லாமல் எல்பிடபிள்யு செய்தார்.

இங்கிருந்து ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. முகமது சமி தன் பங்குக்கு ரன் ஏதும் இல்லாமல் பென் ஸ்டோக்ஸையும், ஜானி பேர்ஸ்டோவை 14 ரன்களிலும் வெளியேற்றினார். பட்லரை குல்தீப் யாதவ் மேஜிக் டெலிவரியில் 10 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்.

இதற்கு அடுத்து மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் ஜோடி சேர்ந்து கொஞ்சம் பொறுப்பாக விளையாடினார்கள். இந்த நேரத்தில் முகமது சமியை கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் கொண்டுவர, முதல் பந்திலேயே மொயின் அலியை 16 ரன்களில் வீழ்த்தினார்.

அடுத்து குல்தீப் மீண்டும் வந்து லிவிங்ஸ்டனை 27 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா வோக்சை 10 ரன்களிலும் உடனுக்குடன் காலி செய்தார்கள். இதற்கு அடுத்து ஆதில் ரசித்தை முகமது சமி 13 ரன்களிலும், மார்க் வுட்டை ரன் இல்லாமலும் பும்ரா இருவரும் வீழ்த்தினார்கள். டேவிட் வில்லி 16 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய தரப்பில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முகமது சமி நான்கு விக்கெட், பும்ரா மூன்று விக்கெட், குல்தீப் இரண்டு விக்கெட் ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி கடைசி 99 ரன்களுக்கு 10 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்திய அணி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெறுகிறது. இதேபோல் அதிகாரப்பூர்வமாக அரையிறுதி வாய்ப்பில் இருந்து இங்கிலாந்து முதல் அணியாக வெளியேறுகிறது. தற்பொழுது புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.