8 ரன் 4 விக்கெட்.. U19 கிரிக்கெட்.. இந்தியா இமாலய வெற்றி.. ஆப்கான் அணி பரிதாபம்

0
14656

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஜனவரி 19 தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மூன்று நாடுகளுக்கான தொடரில் தற்போது தென்னாபிரிக்காவில் விளையாடி வருகின்றனர். இதில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஹாசன் 0 ரன்னில் திவாரியின் பந்து வீச்சில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். பிறகு ஒன் டவுனில் களமிறங்கிய ஜெப்தான் மூன்று ரன்களில் திவாரியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து களம் இறங்கிய கேப்டன் இமான்ஷா கௌடாவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்திய அணி தங்களது சிறப்பான பந்துவீச்சினால் ஆப்கானிஸ்தான் அணியை நெருக்கடிக்குள்ளேயே வைத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் சுகில்கான் 66 பந்துகளில் 21 ரன்களும் நாசர் ஹாசன் 68 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க ஆப்கானிஸ்தான் அணி 33 ஓவர்களில் 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணித் தரப்பில் நமன் திவாரி 7 ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். தனுஷ் கவுடா 2 விக்கெட்டுகளும், ஆராத்யா சுக்லா மற்றும் மௌலியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பின்னர் எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மகாஜன் 16 ரன்களில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷிங் 39 பந்துகளில் ஆறு பவுண்டரி இரண்டு சிக்சர்களுடன் 52 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இவருடன் முசிர்கான் ஜோடி சேர்ந்து 14 ரன்கள் குவித்து இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டியில் விளையாடி இரண்டில் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளன. மற்றொரு அணியான தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. நாளை நடைபெற உள்ள ஐந்தாவது போட்டியில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் மோத உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக் கணக்கை துவங்க போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.