தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதாலும் கிரிக்கெட் சூழல் மாறி வருவதால் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்களுடைய 30 வயதுகளிலே ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறார்கள். ஒரு சிலர் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக தங்களது தேசிய அணிக்கு குட் பாய் சொல்லிவிடுகிறார்கள்.
இந்த நிலையில் சில வீரர்கள் தாங்கள் எடுத்த ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கி மீண்டும் களத்திற்கு திரும்புகிறார்கள். இந்த நிலையில் அப்படி ஓய்வு பெற்று விட்டு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் வீரர் சையிது ஆஃபிரிடி, WWE வீரர் அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் இருக்கிறது என குழந்தைகள் நம்புவது போல், ஆஃப்ரிடி ஐந்து முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு மீண்டும் அதிலிருந்து பின் வாங்கி கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார்.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் அவர் ஓய்வு பெற்றார். 27 டெஸ்டில் விளையாடி 1716 ரன்களும்,48 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். 398 போட்டிகளில் விளையாடி 8064 ரன்களும், 395 கிரிக்கெட்டுகளும் ஆஃப்ரிடி வீழ்த்தி இருக்கிறார். இதேபோன்று 99 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடிய அவர் 1416 ரன்கள் 98 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ. 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ, பிறகு 2020 ஆம் ஆண்டு மீண்டும் களத்திற்கு திரும்பினார்.
எனினும் 2021 நவம்பர் 6ஆம் தேதி மீண்டும் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் கெவின் பீட்டர்சன். 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பீட்டர்சன் மீண்டும் ஒரு மாதத்தில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கி கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார்.
அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ல் கூப்பர் 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற்றார். எனினும் இரண்டு ஆண்டு கழித்து அவர் மீண்டும் களத்திற்கு திரும்பி மீண்டும் 2003 ஆம் ஆண்டு வரை விளையாடினர். சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்கள் 100 விக்கெட்டுகள் 100 கேட்ச்கள் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை கார்ல் கூப்பர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் ஆன இம்ரான் கான் 1987 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் . ஆனால் 92 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்காக களம் இறங்கி இம்ரான் கான் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
இதேபோன்று இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்படாததை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
எனினும் அந்த முடிவில் இருந்து பிறகு பின் வாங்கினாலும் ராயுடுவுக்கு அதன் பிறகு வாய்ப்பே தரப்படவில்லை. இந்திய அணிக்காக 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1694 ரன்கள் 6 t20 போட்டிகளில் விளையாடி வெறும் 42 ரன்கள் மட்டுமே ராயுடு அடித்து இருந்தார்.
இதேபோன்று இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் மோயின் அலி 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் இந்த முடிவை எடுத்த மோயின் அலி, தற்போது மீண்டும் டெஸ்ட் போட்டிகள் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.