ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் படைத்த 6 சாதனைகள்

0
154
Rohit KL Rahul and Jadeja

2021 டி20 உலகக்கோப்பை மிகவும் விறுவிறுப்பான பகுதியை எட்டியுள்ளது. அரை இறுதிக்கு முன்னேறுவதற்காக, ஆஸ்திரேலியா & தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் & இந்தியா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி அபார கம்பேக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் குவித்து, பின்னர் சிறப்பாக பந்துவீசி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் ரன் ரேட்டைப் பொறுத்த வரை இந்தியாவை விட நல்ல நிலைமையில் இருந்தனர். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அற்புதமாக பந்துவீசியும் அதிரடியாக சேஸ் செய்தும் ரன் ரேட்டில் முன்னேறிச் சென்றது. இந்தியா – ஸ்காட்லாந்து போட்டியில், நம் இந்திய வீரர்கள் பல சாதனைகளைப் படைத்தனர். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

ரவிந்திர ஜடேஜா – டி20ஐயில் சிறந்த பந்துவீச்சு 3/15

இடதுகை ஸ்பின்னர் ஜடேஜா, அற்புதமாக பந்துவீசி மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்தினார். தன்னுடைய முதல் ஓவரிலேயே 2 வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து, மிடில் ஓவர்களுக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தார். சர்வதேச டி20ஐயில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சு சாதனையை இப்போட்டியின் மூலம் ஜடேஜா படைத்தார். மேலும், ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

முஹம்மது ஷமி – டி20ஐயில் சிறந்த பந்துவீச்சு 3/15

ஜடேஜாவைப் போல, வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் தன்னுடைய சிறந்த பந்துவீச்சை இப்போட்டியில் எட்டினார். இதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எடுத்த 3/32 தான் இவருடைய சிறந்த பந்துவீச்சாக இருந்தது. இன்றைய போட்டியுடன் அவர் உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை 9 முறை 3 – விக்கெட் ஹால் சாதனை படைத்துள்ளார். ஜாகீர் கனைப் பின்னுக்குத் தள்ளி ( 8 ) முஹம்மது ஷமி முதலிடத்தைப் பிடித்தார்.

ஜஸ்பிரித் பும்ரா – சர்வதேச டி20யில் இந்திய அணியின் அதிக விக்கெட் டேக்கர்

இந்திய அணி தோல்வியை தழுவிய முதல் 2 போட்டியில் கூட இவரது பங்களிப்பு அருமையாக இருந்தது. இந்திய அணியின் முக்கிய அங்கமாக ஜஸ்பிரித் பும்ரா கருதப்படுகிறார். ஸ்காட்லாந்துக்கு அணியின் கடைசி விக்கெட்டை வீழ்திய பிறகு பும்ரா, சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் ( 64 ) வீழ்த்திய வீரராக முன்னேறினார். இதற்கு முன் சாஹல் ( 62 ) விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

கே.எல்.ராகுல் – டி20 உலகக்கோப்பை போட்டியின் பவர்ப்பிளேவில் அரை சதம்

ஆப்கானிஸ்தானை விட ரன் ரேட் பெற, இந்தியா 7.1 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். ரோஹித்தும் ராகுலும் சிறப்பாக ஆடி அதை எட்டினர். லோகேஷ் ராகுல் அதிரடியாக ஆடி, 6 பவுண்டரி & 3 சிக்ஸர்கள் உட்பட 19 பந்தில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதை அவர் முதல் 6 ஓவர்களுக்குள்ளாகவே அடித்தார். டி20 உலகக்கோப்பையின் பவர்ப்பிளேவில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், 2021 டி20 உலகக்கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்த வீரரும் இவரே.

சர்வதேச டி20யில் இந்திய அணியின் அதிவேக சேஸ்

ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலின் அதிரடியால் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே வெற்றிகரமாக துரத்தியது. இதுவே இந்திய அணியின் அதிவேக சேஸாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பாக 2016ல் யுஏஇக்கு எதிராக 10.1 ஓவர்களிலும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 13.1 ஓவர்களிலும் செய்த ரன் சேஸே முதல் 2 இடங்களில் இருந்தது.

- Advertisement -

டி20ஐயில் இந்திய அணியின் அதிகபட்ச பவர்ப்பிளே ஸ்கோர்

தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி பவர்ப்பிளேவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச பவர்ப்பிளே ஸ்கோராக இது அமைந்துள்ளது. 2018ல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அடித்த 78/2 இரண்டாவது இடத்திற்கும் 2007ல் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 76/1 மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.