சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு சீசனில் மட்டுமே விளையாடிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்

0
2870
Irfan Pathan and Vijay Shankar

ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் ஒவ்வொரு அணியிலும் 7 இந்திய கிரிக்கெட் வீரர்களும், 4 ஓவர்சீஸ் கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற்று விளையாடுவார்கள். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே இளம் கிரிக்கெட் வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான். ஏழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு அணியில் இடம் பெறும் பட்சத்தில், சீனியர் வீரர்கள் மற்றும் புதுவரவாக வரும் பல இளம் கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணி வாரியம் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பல சீசன்களில் இடம்பெற்று விளையாடிய வீரர்கள் ஆவார்கள். இது நம் அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் ஒரு சில நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு சீசனில் மட்டுமே பங்கு பெற்று விளையாடி உள்ளனர். அந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.

- Advertisement -

ஹேமங் பதானி

இவரது பெயரை கேட்டவுடன் அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் இவரது வர்ணனை தான் நினைவுக்கு வரும். சீனியர் இந்தியன் கிரிக்கெட் வீரரான இவர் தற்பொழுது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் இந்திய அணியில் 2000 முதல் 2004ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் ஆவார். தனது டெஸ்ட் கேரியரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 94 ரன்களும், 40 ஒருநாள் போட்டிகளில் 867 ரன்கள் குவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அந்த வருடம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் அந்த சீசனில் இவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது சோகக்கதை. அதற்கு அடுத்த ஆண்டும் இவரை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கிட் ராஜ்பூட்

கான்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் இதுவரை மொத்தமாக ஐம்பத்தி இரண்டு பஸ்ட் கிளாஸ் கிரிகெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேபோல 30 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தனது ஐபிஎல் கேரியரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இவர் சென்னை அணி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த சீசனில் விளையாடினார். இரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அதற்கு அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தக்கவைத்துக் கொள்ளவில்லை.

பியூஸ் சாவ்லா

சீனியர் இந்திய கிரிக்கெட் வீரரான இவர் இந்திய அணிக்காக மொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், இருபத்தி ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதேசமயம் இவர் 131 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய ஐபிஎல் கேரியரில் மொத்தமாக 164 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் இவர். பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளில் பல சீசன்களில் விளையாடிவிட்டு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய இவர் மொத்தமாக 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் சென்னை அணி இவரை இந்த ஆண்டு தக்க வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருவது குறிப்பிடதக்கது.

விஜய் சங்கர்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் இதுவரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளிலும், 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். நாற்பத்தி ஐந்து பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரும் தன்னுடைய ஐபிஎல் பயணத்தை சென்னை அணியும் மூலமாகவே தொடங்கினார். 2014ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு இவருக்கு ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ஆல்ரவுண்டர் வீரரான இவர் அந்த ஒரு போட்டியில் பந்துவீச்சில் ஒரே ஒரு ஓவரில் 19 ரன்களை எதிரணிக்கு தாரை வார்த்தார். அந்த போட்டியில் இவருக்கு பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. அந்த ஒரு ஓவரில் இவர் மோசமாக பந்துவீசிய காரணத்தினால் அதற்கடுத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கபடவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் இருந்து வெளியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இர்பான் பதான்

சீனியர் இந்தியன் கிரிக்கெட் வீரரான இவர் இதுவரை இந்திய அணிக்காக மொத்தமாக 29 டெஸ்ட் போட்டிகளிலும், 24 சர்வதேச டி20 போட்டிகளில் 120 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

தன்னுடைய ஐபிஎல் கேரியரை பஞ்சாப் அணியில் தொடங்கி அதன் பின்னர் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு விளையாடிய பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்தார். 2015ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை தங்களது அணியில் விளையாட தேர்ந்தெடுத்தது.

அந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடியவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் சென்னை அணி சஸ்பெண்ட் ஆனது. அந்த இரண்டு ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டு புனே அணிக்காகவும் 2017 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கவும் இர்பான் பதான் விளையாடினார்.

- Advertisement -