சர்வதேச கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னா தலைமையின் கீழ் அறிமுகமான 6 பிரபல வீரர்கள்

0
1866

சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்களில் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மட்டிலும் சதம் அடித்த முதல் வீரரும் இவரே. தோனி தலைமையில் இந்திய அணியில் மட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸிலும் இவர் இணைத்து ஆடியுள்ளார். தோனி – ரெய்னா நட்பைப் பற்றி நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சென்னை அணியில், தோனி இல்லாத நேரங்களில ரெய்னா தான் அணியை வழிநடத்துவார். அதே போல் இந்திய அணியிலும் அவர் செயல்பட்டார். சுரேஷ் ரெய்னா, இதுவரை 12 ஓடிஐ மற்றும் 3 டி20களில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி மற்றும் ஒரு போட்டி ரத்தில் முடிந்தது. 20 ஓவர் போட்டியில் தோற்கடிக்கப்படாத கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தக் கட்டுரையில், சுரேஷ் ரெய்னா தலைமையில் அறிமுகமான 6 பிரபல வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1.விராட் கோஹ்லி

இந்திய அணியின் நடப்பு கேப்டன் விராட் கோஹ்லி, தன்னுடைய அறிமுக டி20 போட்டியை சுரேஷ் ரெய்னாவின் தலைமையின்கீழ் ஆடினார் என்று பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரியாது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2010ல் 5வது வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் அடித்தார். அப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்று ஆரம்பித்த கோஹ்லியின் ஆதிக்கம் இன்று வரை தொடர்ந்து இருக்கிறது.

2.ரவிச்சந்திரன் அஸ்வின்

விராட் கோஹ்லி களமிறங்கிய அதே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வினும் அறிமுகமானார். வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான அஸ்வின், தன்னுடைய அறிமுகப் போட்டியில் 1/22 ( 4 ஓவர்கள் ) என மிக எகனாமிக்கலாக பந்துவீசினார். அதன் பின்னர் கேப்டன் தோனி வழிகாட்டுதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் வெற்றிகரமான ஸ்பின்னராக வலம் வந்தார். நடப்பு இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய அங்கமாக அஸ்வின் கருதப்படுகிறார். டி20களில் முன்னது போல் அவருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.

3.அமித் மிஷ்ரா

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒருநாள் போட்டிகளின் மூலம் 2003ல் அறிமுகமாகினார் அமித் மிஷ்ரா. அதன் பின் 2010 ஜிம்பாப்வே டி20 தொடர் வரை அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இரண்டாவது டி20 போட்டியில் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினார். அஸ்வினைப் போல அவர் மிகவும் எகனாமிக்கலாக பந்துவீசினார். 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கட்டையும் வீழ்த்தினார். மேலும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்பின்னர் இவரே. 154 போட்டிகளில் 156 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

4.அசோக் டிண்டா

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிண்டா தன்னுடைய அறிமுக ஒருநாள் போட்டியை சுரேஷ் ரெய்னாவும் கீழ் தான் ஆடினார். 2010 முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் களமிறங்கினார். அப்போட்டியில் அவர் 7.2 ஓவர்களில் 49 ரன்கள் வழங்கி விக்கெட் ஏதும் எடுக்காமல் நிறைவு செய்தார். மேலும் அப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அசோக் டிண்டா, தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

5.உமேஷ் யாதவ்

டிண்டாவுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமாகினார். அவர் தான் உமேஷ் யாதவ். அறிமுகப் போட்டியில் உமேஷ் யாதவ் பெரிதாக சோபிக்கவில்லை. அசோக் டிண்டாவைப் போல இவரும் 8 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதும் எடுக்காமல் இருந்தார். 286 ரன்களை ஜிம்பாப்வே அணி எளிதில் அடைய, முதல் இன்னிங்சில் ரோஹித் ஷர்மா அடித்த சதம் வீணானது.

6.வினய் குமார்

இவரும் அசோக் டிண்டா மற்றும் உமேஷ் யாதவ் களமிறங்கிய போட்டியில் அறிமுகமாகினார். இந்த இரு வேகப்பந்து வீச்சாளர்களைக் காட்டிலும், வினய் குமார் நன்றாகவே செயல்பட்டார். அந்தப் போட்டியில் பிரண்டன் டெய்லர் மற்றும் சார்லஸ் கோவென்ட்ரியின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்தடுத்த போட்டிகளில் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறவில்லை.