இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு உன்னதமான வீரர் ராகுல் டிராவிட். ‘ இந்திய அணியில் சுவர் ‘ எனப் போற்றப்படுபவர் டிராவிட். பல இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி, ராகுல் டிராவிட்டை மட்டுமே அதிகம் நம்பியிருந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டிராவிட், தன்னுடைய 16 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 286 இன்னிங்சில் 13,288 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி 52.31 ஆகும். அதில் 63 அரை சதமும் 36 சதங்களும் அடங்கும்.
எப்போதாவது இந்திய அணியின் பேட்டிங்கில் சரிவு ஏற்ப்பட்டால், அணியை மீட்க ராகுல் டிராவிட் போராடுவார். பல முறை அவர் இந்திய அணியின் தோல்வியை தடுத்து போட்டியை டிரா செய்ய உதவியுள்ளார். ராகுல் டிராவிட் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய சிறந்த ஆட்டங்கள் ஆடி இருக்கிறார். அதில் சிறந்த 6 இன்னிங்சில்களைப் பற்றி பார்ப்போம்.
1. தென்னாபிரிக்காவுக்கு எதிராக 148, வண்டரர்ஸ் ( ஜனவரி 1997 ):
தன்னுடைய முதல் சதத்தை அடிக்க ராகுல் டிராவிட்டிற்கு ஏழு மாதங்கள் தேவைபட்டன. ஆனால் பொருத்ததற்கு சிறந்த பலன் கிடைத்தன. 1997ல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.
மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், 362 பந்துகளில் 21 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 148 ரன்கள் விளாசினார் ராகுல் டிராவிட். இச்சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்கள் சேர்த்தது. ஜவகல் ஶ்ரீனாத்தின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாபிரிக்கா அணியை 321 ரன்களில் முடக்கி 89 ரன்கள் ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.
2வது இன்னிங்சிலும் டிராவிட் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணி 266 ரன்களில் இருக்கும்போது கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டிக்ளர் செய்தார். அதைத் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா அணி, போட்டியை டிரா செய்தது. எதிரணி தரப்பில் குளினன் சதம் அடித்தார். ஆட்ட நாயகன் விருதை ராகுல் டிராவிட் தட்டிச் சென்றார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180, ஈடன் கார்டன் ( மார்ச் 2001 ):

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் அடித்தது. பின்னர் இந்திய அணி 171 ரன்களில் சுருண்டது. ஃபாலோ ஆனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு பல சிக்கல்கள் ஏற்ப்பட்டன. இந்தியா 232 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு ஒப்பனர்கள் சச்சின் மற்றும் கங்குலி சோபிக்கத் தவறினர்.
அதன் பின்னர், ராகுல் டிராவிட் – லக்ஸ்மன் ஜோடி சேர்ந்தனர். 232 ரன்களில் தவித்துக் கொண்டிருந்த இந்திய அணியை 612 ரன்களுக்கு கொண்டு சேர்த்தனர். 353 பந்துகளில் டிராவிட் 180 ரன்களும் லக்ஷ்மன் 281 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி எப்படியும் தோற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் டிராவிட் – லக்ஷ்மன் ஜோடி தவிடு பொடியாக்கியது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியை 212 ரன்களுக்கு சுருட்டி அப்போட்டியை வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகம் போற்றப்படும் போட்டிகளில் இதுவும் ஒன்று.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 233, அடிலெய்ட் (டிசம்பர் 2003) :
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாகவே இருந்தது. கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் இரட்டை சதம், ஆஸ்திரேலியா அணியை 556 ரன்கள் குவிக்க உதவியது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு எப்போதும் போல சரிவு ஏற்ப்பட்டது.66/0 என சிறப்பான தொடக்கத்தில் இருந்து 85/4 என விக்கெட்டுகள் மல மலவென விழுந்தது. மீண்டும் ஒரு முறை டிராவிட் – லக்ஷ்மன் ஜோடி சேர்ந்தனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் ஒரு ஈடன் கார்டன் சம்பவத்தை எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்ப்பார்ப்பை டிராவிட் – லக்ஷ்மன் ஜோடி பொய்யாக்கவில்லை. இருவரும் இணைந்து 330 ரன்கள் சேர்த்தனர். இம்முறை லக்ஷ்மன் 148 ரன்கள் அடிக்க டிராவிட் 233 ரன்கள் விளாசினார்.
33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியை 196 ரன்களில் முடக்கியது. 230 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ராகுல் டிராவிட் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் சேர்த்து, இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாச்தில் வெற்றி பெற வைத்தார்.
4. பாகிஸ்தானுக்கு எதிராக 270, ராவல்பின்டி (ஏப்ரல் 2004):

பாகிஸ்தானுக்கு எதிரான 2004 டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில், முதலில் ஆடிய பாகிஸ்தான் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி. இன்னிங்சின் முதல் பந்துலயே விக்கெட்டை இழந்தது இந்தியா. அதன்பிறகு, மைதானத்திற்குள் நுழைந்தார் ராகுல் டிராவிட்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் ராகுல் டிராவிட், 495 பந்துகளில் 270 ரன்கள் விளாசினார். இதுவே டிராவிடின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர். அப்போட்டியில், இந்திய அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அபார சாதனை படைத்து.
5. இங்கிலாந்துக்கு எதிராக 217, ஓவல் (செப்டம்பர் 2002):
இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2002ல் நடந்தது. மூன்றாவது டெஸ்டில் ராகுல் டிராவிட், சச்சின், கங்குலி மூவரும் சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகினர். அதனால் தொடர் 1 – 1 என சமநிலைக்கு வந்தது.
நான்காவது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி மைக்கேல் வாஹன் அதிரடியால் 515 ரன்கள் குவித்தது. 279 பந்துகளில் வாஹன் 195 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய இந்திய அணி வெறும் 6 ரன்கள் மட்டுமே பின்தங்கியது. ராகுல் டிராவிட் 468 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் மொத்தம் 217 ரன்கள் அடித்தார். அந்த இன்னிங்சில் ராகுல் டிராவிட் தவிர வேற எந்த இந்திய வீரரும் சதம் அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணி அணி இரண்டாவது இன்னிங்சில் 114/0 என இருக்கும் போது, போட்டி டிரா ஆனது. தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு உறுதுணையாய் இருந்த ராகுல் டிராவிட் நாயகன் விருதை வென்றார். மேலும், தொடர் நாயகன் விருதை மைக்கேல் வாஹனுடன் பகிர்ந்துக் கொண்டார். இந்த தொடரில் 100.3 சராசரியில் டிராவிட் 602 ரன்கள் குவித்தார்.
6. இங்கிலாந்துக்கு எதிராக 146*, ஓவல் (ஆகஸ்ட் 2011):
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிடின் இந்த 146 ரன்கள் பெரிதும் போற்றப்பட்ட ஒன்று. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் இந்திய ஓப்பனர்கள் சேவாக் மற்றும் டிராவிட் களமிறங்கினர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் டிராவிட் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார்.
சேவாக், தோனி, லக்ஷ்மன், டெண்டுல்கர், கம்பீர், ரெய்னா என அனைத்து நட்சத்திர வீரர்களும் 25 ரன்களை கூடத் தாண்டாமல் ஆட்டமிழந்தனர். மிஷ்ரா – டிராவிட் சேர்ந்து 87 ரன்கள் சேர்த்தனர். இதுவே இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. மிஷ்ரா 77 பந்துகளில் 43 ரன்கள் அடித்து டிராவிடின் சுமையை சிறிது குறைத்தார்.
இறுதியில் இந்திய அணி 91 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ராகுல் டிராவிட் ஆட்டமிழக்காமல் 146 ரன்கள் விளாசினார். தொடக்க வீரராக களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களுடனும் ஜோடி சேர்ந்து ஆடி, உலக சாதனை படைத்தார் டிராவிட். இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்திய டெஸ்ட் அணி டிராவிட்டை நம்பி இருந்தது என்பதற்கு இந்த டெஸ்ட் போட்டி சிறந்த உதாரணம்.