2024-25 ஆண்டுக்கான இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி சீசன் நடைபெற்று வருகிறது. எலைட் பிரிவில் 32 அணிகளும், பிளேட் பிரிவில் ஆறு அணிகளும் இடம்பெற்று இருக்கின்றன.
இதில் ப்ளேட் பிரிவில் இடம் பெற்றுள்ள அருணாச்சல் பிரதேஷ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல் பிரதேஷ் அணி டோரியா மட்டும் தாக்குப்பிடித்து 97 ரன்கள் எடுக்க 39.4 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத் தரப்பில் சாமா மிலிந்த் மற்றும் கார்த்திகேயன் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து முதல் நாளில் எஞ்சி இருந்த 48 ஓவர்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தன்மய் அகர்வால் மற்றும் ராகுல் சிங் இருவரும் அருணாச்சல் பிரதேஷ் பந்துவீச்சாளர்களை வதம் செய்து விட்டார்கள்.
இந்த இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 40 புள்ளி இரண்டு ஓவரில் 449 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார்கள். முதல் விக்கட்டாக ராகுல் சிங் 105 பந்துகளில் 26 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உடன் 185 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இன்னொரு முனையில் நின்று அதிரடி காட்டிய துவக்க ஆட்டக்காரர் தன்மய் அகர்வால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெறும் 160 பந்துகளில் 33 பவுண்டரிகள் 21 சிக்ஸர்கள் உடன் 323 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 201.87.
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெறும் 48 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 529 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறது. இன்னும் டிக்ளேர் செய்யாத காரணத்தினால், நாளை தொடரும் ஆட்டத்தில் தன்மய் அகர்வால் 400 ரன்கள் கடந்தும் அடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 22 ரன்கள் பின்னிலை.. ஆனாலும் டிக்ளேர் செய்த ஆஸி.. வெஸ்ட் இண்டீஸ்க்கு வரலாற்று வெற்றிக்கு வாய்ப்பு
இந்தப் போட்டியில் ஹைதராபாத் தரப்பில் 63 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இந்த போட்டியில் ஏதாவது இந்திய அளவிலான உள்நாட்டு சாதனைகள் தகர்க்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த திலக் வர்மா தற்பொழுது இந்திய ஏ அணியில் இடம் பெற்று விளையாடுகிறார்.