கிரிக்கெட் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாகத்தான் இருக்கிறது. அதற்கடுத்துப் பேசுவதாய் இருந்தால் பந்துவீச்சாளர்களைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனால் கிரிக்கெட்டில் மிக முக்கியமான துறையான விக்கெட் கீப்பிங் பற்றி யாரும் பெரிதாய் பேசுவதில்லை. ஒரு ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஒவ்வொரு பந்துக்கும் அதிகப்படியான கவனத்தையும், உழைப்பையும் தரக்கூடியவர் விக்கெட் கீப்பர்தான். விக்கெட் கீப்பர் பெரும்பாலும் கேட்ச்கள் மூலமே அதிக பேட்ஸ்மேன்களை வெளியேற்றுகிறார். இந்தக் கட்டுரையில் அதிக கேட்ச்களை பிடித்த ஐந்து விக்கெட் கீப்பர்கள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
குமார் சங்கக்கரா – இலங்கை மற்றும் ஆசிய லெவன், ஐ.சி.சி உலக லெவன்
உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சங்கக்காரா விக்கெட் கீப்பங்கிலும் மிகச் சிறந்தவராகவே விளங்கினார். தான் விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் எதனாவது ஒரு வகையில் தாக்கத்தை உருவாக்கினார். 594 ஆட்டங்களில், 539 கேட்ச்சுகளை பிடித்து, இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தையும் பிடிக்கிறார். இவரது ஆட்டமிழப்பு சராசரி ஒரு ஆட்டத்திற்கு 1.358!
இயன் ஹீலி – ஆஸ்திரேலியா
500க்கும் அதிகமான கேட்ச்களை எடுத்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இவர், இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறார். 287 போட்டிகளில் 560 கேட்ச்களை பிடித்த இவரது ஆட்டமிழக்க வைக்கும் சராசரி ஒரு இன்னிங்சிற்கு 1.602. முழுமையான திறமையான விக்கெட் கீப்பர்களில் இயன் ஹீலிக்கு எப்போதும் ஒரு இடம் நிரந்தரமாக உண்டு!
எம்.எஸ்.தோனி – இந்தியா மற்றும் ஆசிய லெவன்
இந்தியாவின் வெற்றிக்கரமான கேப்டன். உலகின் மிக வெற்றிக்கரமான பினிசிங் பேட்ஸ்மேன். ஸ்டம்புகளுக்கு பின்னால் அதிவேகமாகச் செயல்படக்கூடிய விக்கெட் கீப்பர். இப்படி தோனியைப் பற்றிக்கூற நிறைய விசயங்கள் இருக்கவே செய்கிறது. 538 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 634 கேட்ச்களை எடுத்து, இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் ஸ்டம்பிங் செய்யும் உண்மையான வேகம் இன்றளவிலும் கிரிக்கெட் உலகில் பிரசித்தி பெற்ற ஒன்று!
ஆடம் கில்கிறிஸ்ட் – ஆஸ்திரேலியா மற்றும் ஐ.சி.சி உலக லெவன்
விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற சொல்லாடல் கிரிக்கெட் உலகில் உச்சரிக்கப்படுவதற்கு முதல் காரணமாய் இருந்தவர். அதுவரையில் ஒரு விக்கெட் கீப்பர் என்பவர் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்டால் போதுமென்ற நிலைதான் இருந்தது. ஆனால் இவரது வருகைக்குப் பின்னே இவரது மிரட்டலான பேட்டிங்கை பார்த்த கிரிக்கெட் நாடுகள் எல்லாமே, இவரைப் போல் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை எதிர்பார்க்கவும் தயாரிக்கவும் ஆரம்பித்தன. விக்கெட் கீப்பிங்கில் இவரது வேகம் பேட்ஸ்மேன்களையும், அவுட் அப்பீல்கள் அம்பயர்களையும் தனிப் பயத்திற்குத் தள்ளின என்பதுதான் உண்மை. மொத்தம் 813 கேட்ச்களை எடுத்து, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கிறார்.
மார்க் பவுச்சர் – தென் ஆப்பிரிக்க மற்றும் ஐ.சி.சி உலக லெவன், ஆப்பிரிக்க லெவன்
உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சர், பேட்டிங்கிலும் அணிக்குச் சராசரியான பங்களிப்பைத் தரக்கூடியவர். 467 போட்டிகளில் விளையாடியவர் சராசரியாக ஒரு இன்னிங்ஸில் 1.674 ஆட்டமிழப்புக்களைச் செய்து, 952 கேட்ச்களை எடுத்து, இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறார். எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பிங்கில் கண்ணைத் தாக்கிய பந்தொன்று இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியதான் சோகம். இல்லையென்றால் இவரது விக்கெட் கீப்பிங் புள்ளி விபரங்களில் பெரியளவில் மாற்றம் நிகழ்ந்திருக்கும்!