2022 ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 5 விஜய் ஹசாரே தொடர் நட்சத்திரங்கள்

0
1059
Sharukkhan and KS Bharath

சமீப காலங்களாக, எதேனும் ஒரு இளம் வீரர் உள்ளூர் போட்டிகளில் அனைவரையும் விட அபாரமாக ஆடினால் நேரடியாக ஐ.பி.எல் ஏலத்திற்கு சென்றுவிடுகிறார். அணி நிர்வாகிகளும் உள்நாட்டு வீரர்களை வாங்க போட்டிப் போட்டுக் கொள்கின்றனர். மேலும், புதிய 2 அணிகளின் வருகையால் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களும் இம்முறை களமிறங்குவர். மெகா ஏலம் என்பதால் அனைத்து அணிகளும் புதிதாக தங்களது அணியை கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இம்முறை ஏலம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிசிசிஐ நடத்திய விஜய் ஹசாரே தொடரின் மூலம் பல நட்சத்திர வீரர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அவர்களில் ஒரு சில வீரர்கள் நிச்சயம் கோடிக்கணக்கில் விலை போகவும் உள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

ஷாருக் கான்

தமிழக வீரர் ஷாருக் கான், வரும் காலத்தில் மிகப் பெரிய இடத்திற்கு உயரப்போகிறார் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். எம்.எஸ்.தோனி போல் கடைசியில் ஃபினிஷராக களமிறங்கி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணிக்கு முக்கியமான ரன்களை சேர்த்து வருகிறார். சையத் முஸ்டக் அலி தொடரை தமிழகம் கைப்பற்ற இவர் தான் மிக முக்கியக் காரணம். என்னதான் தமிழக அணி விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் ஷாருக் கான் தன் வேலையை சிறப்பாக செய்தார். அத்தொடாரில் மொத்தமாக 8 போட்டிகளில் 253 ரன்கள் அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 186 ஆகும். வரும் ஏலத்தில் இவரை வாங்க பல அணிகள் மோதிக்கொள்வர்.

ரிஷி தவான்

விஜய் ஹசாரே தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறப்பாக ஆடிய வீரர் ரிஷி தவான். பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் பிரமாதமாக செயல்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ரிஷி தவான், 8 போட்டிகளில் 457 ரன்களும் 17 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல் இரண்டிலும் 2வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டருக்கு எப்போதும் மவுசு அதிகம். எனவே 2022 ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போவார்.

ரிங்கு சிங்

ஐ.பி.எல் தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்ததால் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் காயங்கள் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டும் வந்தார். இம்முறை உத்திரபிரதேச அணிக்காக 7 போட்டிகளில் 379 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார். அதில் அவரது சராசரி 94.75 ஆகும். மிடில் ஆர்டரில் நிலைத்து ஆடக் கூடிய திறன் கொண்ட இவர் அடுத்த ஐ.பி.எல் சீசனில் ஜொலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர்

கடந்த ஐ.பி.எல் முதல் பாதியில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. பின்னர் காயம் காரணமாக இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி இரண்டிலும் இருந்து விலகிக் கொண்டார். நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் தன் சூழலால் அனைவரையும் திணறச் செய்து மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார். அத்தோடரில் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்.சி.பி நிர்வாகம் இவரைத் தக்கவைக்காததால் நேரடியாக ஏலத்திற்கு வரப் போகிறார். பவர்பிளேவில் பந்துவீசும் இந்த ஆல்ரவுண்டர் அடுத்து நடக்கவிருக்கும் ஏலத்தில் பல கோடிகளுக்கு அதிபர் ஆகப் போகிறார்.

கே.எஸ்.பரத்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டிகளில் கே.எஸ்.பரத் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். ஆர்.சி.பி அணிக்காக 2/3 போட்டிகளில் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதோடு டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் 5 போட்டிகளில் 370 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது ஐ.பி.எல் அணிகளும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளன. ஆகையால் கே.எஸ்.பரத்தை பெரிய தொகைக்கு வாங்ப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.