சர்வதேச டி20 மற்றும் ஓடிஐ இரண்டிலும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 5 வீரர்கள்

0
123
Wanindu Hasaranga and Brett Lee

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தால், பேட்டிங் செய்யும் அணிக்கு அது அதிக பின்னடைவை ஏற்படுத்தும். அதே சமயம் தோல்வியின் விளிம்பில் இருந்த அணியும் வெற்றிப் பாதைக்கு செல்லும். தொடர்ந்து 3 விக்கெட்டுகள் எடுத்தால், அது ஹாட்ரிக் எனப்படும். சர்வதேச டி20 போட்டியில் இதுவரை 25 முறையும் ஓடிஐயில் 49 முறையும் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. டி20ஐ & ஓடிஐ என இரண்டு ஃபார்மட்டிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பது அரிதான ஒன்று. ஆனால் அதை 5 வீரர்கள் செய்துள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

பிரெட் லீ

இரு லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டிலும் ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. மேலும், சர்வதேச டி20யில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் கிரிக்கெட்டரும் இவரே. வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியின் 17வது ஓவரில் ஷகிப் அல் ஹாசன், மோர்டசா மற்றும் அலோக் கப்பிலியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

2003 உலகக்கோப்பையில் கென்யா அணிக்கு எதிராக ஓடிஐ ஹாட்ரிக்கை நிகழ்த்தினார். ஒட்டினோ, பட்டேல் & ஒபுயா ஆகிய மூவரின் விக்கட்டையும் எடுத்தார். பிரெட் லீ, தன்னுடைய இரு ஹாட்ரிக்கையும் உலகக்கோப்பைத் தொடரில் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திசாரா பெரேரா

இச்சாதனையை படைக்கும் இரண்டாவது வீரர், இலங்கை ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா. 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் யூனிஸ் கான், ஷாஹித் அப்ரிடி & சர்பராஸ் அகமத் ஆகியோர்களை ஆட்டமிழக்கச் செய்து ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

டி20யில் இந்திய அணிக்கு எதிராக ராஞ்சியில் ஹாட்ரிக் எடுத்தார். பலம் வாய்ந்த இந்திய மிடில் ஆர்டரை நிலைகுலைய வைத்தது. யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

லசித் மலிங்கா

இலங்கை அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான மலிங்கா, ஹாட்ரிக் சாதனைக்குப் பெயர் போனவர். ஒருநாள் போட்டியில் 3 முறை மற்றும் டி20யில் இருமுறை இதைச் செய்துள்ளார். 2007ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் முதல் முறையாக ஓடிஐ ஹாட்ரிக் எடுத்தார். இன்னும் சொல்லப்போனால் அது டபுள் ஹாட்ரிக். தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2017ல் இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கிடையே நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் தனது முதல் டி20ஐ ஹாட்ரிக்கை நிகழ்த்தினார். இவரது துல்லியமான பந்துவீச்சில் முஷ்பிகுர் ரஹிம், மோர்டசா & மெஹதி ஹாசனின் விக்கெட்டுகள் பலியாகியது.

வனிந்து ஹசரங்கா

இப்பட்டியலில் இருக்கும் 3வது மற்றும் கடைசி இலங்கை வீரர், ஹசரங்கா. சமீபத்தில் இவரின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டி20யில் நம்பர் 1 பவுலராகவும் முன்னேறினார். 2017ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

2021 டி20 உலகக்கோப்பை மூலம் 20 ஓவர் போட்டியிலும் ஹாட்ரிக் சாதனை படைத்தார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான முக்கியப் போட்டியில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இலங்கை பக்கம் கொண்டுவந்தார். ஆனால் கடைசி ஓவரில் மில்லர் அதிரடியில் தென்னாபிரிக்கா இலங்கையை தோற்கடித்தது.

கசிகோ ரபாடா

வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 2017ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் 4வது ஓவரில், இச்சாதனையை அவர் படைத்தார். தமிம் இக்பால், லிட்டன் தாஸ் மற்றும் மஹமதுல்லா ஆகிய மூன்று முக்கிய வீரர்களையும் பெவிலயனுக்கு அனுப்பினார்.

சமீபத்தில் நடந்த 2021 டி20 உலகக்கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் 3 ஓவரில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆனால் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தி தென்னாபிரிக்காவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இருப்பினும் அவர்களால் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற இயலவில்லை.