இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான வீரர்கள் ஏலம் 29ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.
இதில் அதிகத் தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்களில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இருக்கிறார். மற்ற நான்கு வீரர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் லெஜென்ட்ஸ் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் மொத்தமாக மணிப்பால் டைகர்ஸ், இந்தியா கேபிடல்ஸ், கொனார்க் சூர்யாஸ் ஒடிசா, அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டிகள் அனைத்தும் சூரத், ஜோத்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளன.
200க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் இருப்பாக 8 கோடி ரூபாயை வைத்திருந்தன. அதில் இறுதியாக 97 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றனர். அதில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள் குறித்துப் பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் தவான் குல்கர்னி இருக்கிறார். இந்தியா கேப்பிடல்ஸ் அணி இவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இதனால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். இவர் 90-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளிலும், 14 சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய அனுபவத்தை பெற்றிருக்கிறார். 162 டி20 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதில் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ராஸ் டைலர் கொனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியால் 50.34 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார். 450 சர்வதேச போட்டிகளில் விளையாடி 40 சதங்கள் மற்றும் 93 அரை சதங்களுடன் 18000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான டான் கிறிஸ்டியன் 56.95 லட்ச ரூபாய்க்கு மணிப்பால் டைகர்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். மொத்தமாக 409 டி20 போட்டிகளில் விளையாடி 5825 ரன்களுடன் 280 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:வம்பிழுக்கும் மைக்கேல் வாகன்.. கோலியை விட சிறந்தவரா ஜோ ரூட்.. புள்ளி விவரத்தை வைத்து சர்ச்சை பதிவு
இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான சாட்விக் வால்டன் 60 லட்ச ரூபாய்க்கு அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கி இருக்கிறது. 179 டி20 இன்னிங்ஸ் விளையாடி 3500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இசுரு உதானா 62 லட்ச ரூபாய்க்கு அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். இதுவே இந்த ஏலத்தில் மிக உயர்ந்த விலையாகும். இதில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான் மற்றும் கிறிஸ் கெய்ல் என 12 வீரர்களை அதன் உரிமையாளர்கள் தக்கவைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.