2023 ஐ.பி.எல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு வீரர்கள்

0
812
Ben Stokes and Sam Curran

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் மெகா ஏலத்தோடு நடந்து முடிந்திருக்கிறது. சில அணிகளுக்குத் தேவையான வீரர்கள் முழுமையாகக் கிடைத்திருக்கிறார்கள். சில அணிகளுக்குச் சரியான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சில வீரர்கள் திறமையிருந்தும் ஏலத்தில் விலைபோகாமல் இருக்கிறார்கள். சில வீரர்கள் அடுத்த ஆண்டு ஏலத்திற்கு வருவதாய் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் அடுத்த ஆண்டு சிறிய அளவில் நடத்தப்படும் ஐ.பி.எல் ஏலத்தில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொண்டால், அதிக விலைக்குப் போக வாய்ப்பிருக்கிறது என்று பார்க்கப் போகிறோம்.

சாம் கரன்:

இங்கிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் புதுப்பந்தில் சிறப்பாகப் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர். பேட்டிங் வரிசையில் மூன்று, ஆறாம் இடங்களில் தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொள்ளலாம். பேட்டிங்கில் அதிரடியாகவும் விளையாடக் கூடியவர். இந்தக் காரணங்களால் இவர் ஏலத்தில் அதிக விலைக்குப் போக அதிக வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -
மிட்ச்செல் ஸ்டார்க்:

ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளரான இவரின் ஸ்விங் யார்க்கர்கள், கிரிக்கெட் உலகில் எந்த பேட்ஸ்மேனும் விரும்பாத ஒன்று. பவர்-ப்ளேவில் புதுப்பந்தில் ஸ்விங்கும் செய்வார். இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர் மற்றும் கட்டர்கள் மூலம் சிறப்பாகவும் வீசுவார். கூடவே பேட்டிங்கிலும் சில சிக்ஸர்கள் அடிக்கக் கூடியவரே. இதனால் இவர் ஏலத்திற்கு வந்தால் பலத்த போட்டி உறுதி!

ஹென்றி கிளாசன்:

தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். இவரின் இந்த இரட்டைப் பங்களிப்பை தாண்டி, இவர் பேட்டிங்கின் நடுவரிசையில் வந்து அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதாலும், சமீபத்தில் இந்தியாவுடன் இந்திய ஆடுகளத்தில் அதிரடியாக ரன் குவித்திருப்பதாலும், இவர் மீதும் சில ஐ.பி.எல் அணிகளின் பார்வை பலமாகவே இருக்கும்!

பென் ஸ்டோக்ஸ்:

தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்டிங் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், இந்த இங்கிலாந்து வீரர்தான். பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் இறங்கி, அதிரடியாய் விளையாடி தனி நபராய் ஆட்டத்தை மாற்றக்கூடியவர். பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் முழுமையாக வீசக்கூடிய வகையில் திறமை இருப்பவர். மேலும் கேப்டனாய் அணியை வழிநடத்தவும் கூடியவர். இப்படியான காரணங்களால் அடுத்த ஆண்டு ஏலத்திற்கு இவர் வந்தால், இவர்தான் அதிக விலைக்குப் போகக்கூடிய வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை!

- Advertisement -
டசன் சனகா :

இலங்கை பேட்டிங் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இலங்கை அணியை வழிநடத்தி வரும் இவரது பேட்டிங், ஆறு, ஏழாம் இடங்களில் அதிரடியாய் இருப்பதோடு, ஆட்டத்தை வென்று கொடுக்கும் அளவில் இருக்கிறது. இவர் பந்தை அடிக்கும் முறையில், தாக்குதல் பேட்டிங் தொழிற்நுட்பம் சிறப்பாக இருப்பது தெரிகிறது. இவர் மீதும் அடுத்த ஆண்டு ஏலத்தில் சில அணிகளின் பார்வை இருக்கலாம்!

இவர்கள் மட்டும் இல்லாமல் மெகா ஏலத்தில் நிறைய திறமையான வீரர்கள் விலைபோகாமல் இருக்கிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன், இலங்கையின் அசலங்கா போன்ற வீரர்கள். இப்படியான வீரர்களில் யாராவது அவர்களது அடிப்படை விலையில் அணிகளால் வாங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.