ஓய்வு பெறாது, உலக டி20 தொடர்களில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டும், தங்களின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியாத சில வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் தங்கள் தேசிய அணிக்குத் திரும்பினால் மிகப்பெரிய பலமாக அமைவார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஓய்வும் பெறாது, உலக டி20 தொடர்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டும், தங்கள் தேசிய அணிக்குத் திரும்ப முடியாத நான்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
சுனில் நரைன்
இவர் கடைசியாக வெஸ்ட் அணிக்காக விளையாடியது 2019ஆம் ஆண்டு. சம்பள ஒப்பந்த பிரச்சினைதான் இவர் வெஸ்ட் இன்டீஸ் அணியில் இடம்பெற முடியாததிற்கான முக்கியக் காரணம். உலகம் முழுக்க நடைபெற்று வரும் டி20 தொடர்களில் பந்துவீச்சில் மிகச்சிறப்பாகச் செயல்படும் சுனில் நரைன், பேட்டிங்கிலும் அதிரடியான பங்களிப்பைத் தரக்கூடியவர். 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் 357 ரன்களை குவித்திருக்கிறார். இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடிய இவர் கைப்பற்றியது 9 விக்கெட்டுகள்தான் ஆனால் ஒரு ஓவருக்கு தந்ததோ வெறும் 5.56 ரன்கள்தான். வருகின்ற டி20 உலகக்கோப்பையில் இவர் வெஸ்ட் இன்டீஸ் அணியில் இடம்பெற்றால், சுழற்பந்து வீச்சு துறையில் பலம் சேர்ப்பதோடு, இறுதிக்கட்டத்தில் பேட்டிங்கிலும் பங்களிப்பைத் தந்து, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை!
பாப் டூ பிளிசிஸ்
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 2021-22ஆம் ஆண்டுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாய் அறிவித்தார் இந்த முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன். ஆனால் 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில், 16 ஆட்டங்களில் 633 ரன்களை சென்னை அணிக்காகக் குவித்து இரண்டாவதாய் இடம்பெற்றும், தென் ஆப்பிரிக்க டி20 உலகக்கோப்பை அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்றதோடு, 16 ஆட்டங்களில் 468 ரன்களை குவித்திருக்கிறார். இவரை வருகின்ற உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்காகத் தேர்வு செய்வதின் மூலம், பேட்டிங்கில் துவக்க இடத்தைப் பலப்படுத்தலாம்!
முகமது ஆமீர்
பந்தை இருபுறமும் மிகத்திறமையாக ஸ்விங் செய்யும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஆமிரும் ஒருவர். 2017ஆம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில், இந்தியா பாகிஸ்தான் மோதிய இறுதிபோட்டியில், 33 ரன்களுக்குள் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவானை பெவிலியன் அனுப்பி, இந்திய அணி 158 ரன்களுக்குள் சுருள காரணமாக இருந்தவர். ஒட்டுமொத்தமாக 209 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் முகமது ஆமீர் 238 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பந்துவீச்சு எகானமி 7.14தான். இங்கிலாந்தில் குடியுரிமையோடு இங்கிலாந்தில் குடியேறுவதற்காக சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்தவர், பின்பு அதைத் திரும்பப் பெற்றார். வருகின்ற உலகக்கோப்பையில் ஷாகின் ஷா அப்ரிடியோடு முகமது ஆமிரும் பாகிஸ்தான் அணிக்காகக் களமிறங்கினால், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு துறை மிகத் தரமான தாக்குதலை எதிரணிகள் மேல் தொடுக்கும்!
இம்ரான் தாஹீர்
தென் ஆப்பிரிக்க அணிக்காக 2013 முதல் 2016 வரை 38 டி20 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 68 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது பந்துவீச்சு எகானமி ஓவருக்கு 6.73 ரன்கள்தான். மேலும் ஒவ்வொரு முறை தனது பந்துவீச்சில் 15 ரன்களை தரும்பொழுதும் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். டாப் ஸ்பின், பிளைட் அன்ட் பிளாட்டர் டெலிவரிஸ், கூக்ளி, ஆர்த்தடாக்ஸ் லெக்ஸ் ஸ்பின் என இம்ரான் தாஹீர் ஒரு முழுமையான லெக் ஸ்பின் பந்துவீச்சாளர். 43 வயதான இம்ரான் தாஹீர் இதுவரையில் நல்ல உடற்தகுதியோடு, உலக டி20 தொடர்களில் விளையாடித்தான் வருகிறார்.
இந்த ஆண்டு பாகிஸ்தான் பிரிமியர் லீக் பி.எஸ்.எல் டி20 தொடரில் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 6.47 எகானமியில், 18.62 ஆவ்ரேஜில் கைப்பற்றி இருக்கிறார். வருகின்ற உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் இவரைத் தேர்வு செய்து, சைனாமேன் பவுலர் தர்ரைஸ் ஷம்சியோடு கூட்டணிபோட வைத்தால், ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார். சாஹல்-குல்தீப் இந்திய ஜோடியைப் போல, தாஹீர்-ஷம்சி ஜோடியும் ஒரு சிறிய காலத்திற்கு வெற்றிக்கரமாக வலம் வரலாம்!