சர்வதேச கிரிக்கெட்டில் தன் தேசிய நாட்டை வழிநடத்துவது பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்று. ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடாது. எந்த அளவிற்கு பெருமையோ அதே அளவிற்கு சவாலான பணியாக அமைகிறது. ஐசிசி தொடர்களில் விளையாடும் போது கூடுதல் அழுத்தம் இருப்பது இயல்பு தான். அதையெல்லாம் சமாளித்து வீரர்களை ஒன்றிணைத்து கோப்பையை முத்தமிடுவது பெரிய சாதை ஆகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி.
2013ஆம் ஆண்டு கடினமான நேரத்தில் வீர்ரகளுக்கு தேவையான ஊக்கம் அளித்தும் பவுலர்களை சிறப்பாக பயன்படுத்தியும் கோப்பையை வென்றார். 3 ஐசிசி கோப்பைகள் வென்ற தோனி, ஆஸ்திரேலிய அணிக்காக 4 ஐசிசி கோப்பைகள் வென்ற ரிக்கி பாண்டிங் என பல வெற்றிகரமான கேப்டன்கள் கிரிக்கெட் வரலாற்றில் உள்ளனர். அதே சமயம் ஐசிசி கோப்பை வெல்லவில்லை என்றால் அவர் கேப்டன் பொறுப்புக்கு தகுதியற்றவர் இல்லை என்று கூறிவிட முடியாது. பல நட்சத்திர வீரர்கள் சிறப்பாக வழிநடத்தியும் கோப்பை வெல்ல முடியாமல் விரக்தி அடைத்துள்ளனர். இந்த தொகுப்பில் ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்லாத 4 பிரபல கேப்டன்கள் குறித்து பார்ப்போம்.
மஹேலா ஜெயவர்த்தனே
இலங்கை அணியைச் சேர்ந்த ஜெயவர்த்தனே, கிரிக்கெட் லெஜன்ட்களில் ஒருவராக விளங்குகின்றார். 18 வருடங்கள் எனும் நீண்ட கிரிக்கெட் கேரியர் கொண்ட இவர் 2004 முதல் 2013 வரை இலங்கை அணியை அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலும் வழி நடத்தினார். சுமார் 10 ஆண்டுகள் தலைமை தாங்கியும் ஒரு ஐசிசி கோப்பை கூட இவரால் வெல்ல இயலவில்லை. 126 ஒருநாள் மற்றும் 19 டி20ஐ போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குச் சென்றதே இவரது அதிகபட்ச சாதனை ஆகும். அந்த பைனலில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது.
கிரேம் ஸ்மித்
துவக்க ஆட்டக்காரர் கிரேம் ஸ்மித், தென்னாபிரிக்க அணியின் தரமான கேப்டனாக திகழ்ந்தார். அவரது வழிகாட்டலின் படி செதுக்கப்பட்ட அணி மிகவும் பலம் வாய்ந்த வீரர்களை கொண்டது. டெஸ்ட் தரவரிசையில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஐசிசி தொடர் என வந்துவிட்டால் அதற்கு அப்படியே எதிராக செயல்பட்டது. 2003 முதல் 2011 வரை 2 ஐம்பது இவர் உலகக் கோப்பை, 3 டி20 உலகக் கோப்பை, 3 சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 8 தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட இவர் ஒரு ஐசிசி கோப்பையை கூட உயர்த்தவில்லை என்பது மிகப் பெரிய ஏமாற்றம்.
ஏபி டிவில்லியர்ஸ்
இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு தென்னாபிரிக்க லெஜன்ட், ஏபி டிவில்லியர்ஸ். ஆக்ரோஷமான பேட்டிங்கை காட்டி உலகம் முழுக்க பல ரசிகர்களை கொண்டுள்ளார். அதிரடியாக பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் தென்னாபிரிக்கா அணிக்கு சிறந்த கேப்டனாகவும் இவர் இருந்தார். 1 ஐம்பது ஓவர் உலகக் கோப்பை, 1 டி20 உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் தென்னாபிரிக்காவை தலைமை தாங்கிய இவர் ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டார். இது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமில்லாமல் பல இந்திய ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. காரணம், ஐபிஎல் போன்ற தொடர்களில் டிவில்லியர்ஸ் மீது வைத்த அளவு கடந்த அன்பு தான்.
விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கடைசி கேப்டன். தான் கேப்டனாக இருக்கும் போதே எதிர்காலத்திற்கு சிறந்த கேப்டனை அறிந்து அவ்விடத்தில் அமர்திவிட்டு விலகினார். இந்திய அணிக்காக 2013 முதல் 2022 வரை கேப்டன் பதவியில் நீடித்த கோலி சமீபத்தில் தான் அப்பொறுப்பில் இருந்து விலகினார். இவருக்கு கீழ் இந்திய அணி மேலும் வலுவானது. சிறப்பாக ஆடும் வீரர்களை அனைவரும் முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வெளியேறிவிடுவர். 2013ஆம் ஆண்டுக்குப் பின் இதுதான் நடக்கிறது. எந்த ஒரு ஐசிசி கோப்பையும் இல்லாமல் விராட் கோலி பதவி விலகினார்.