இலங்கை டி20 தொடரை விட ஐபிஎல் தொடரில் பல மடங்கு சம்பளம் வாங்கும் 4 வீரர்கள்

0
310
Dewald Brevis and Wanindu Hasaranga

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் என்ற டி20 லீக்கை நடத்துவது போல, இலங்கை கிரிக்கெட் வாரியம் லங்கா பிரீமியர் லீக் என்ற எல்.பி.எல்-யை நடத்தி வருகிறது. இதன் மூன்றாவது சீசன் ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் கண்டி பால்கன்ஸ், யாழ் கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், தம்புல்லா ஜெய்ன்ட்ஸ், காலே கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன!

இந்தத் தொடரில் ஐ.பி.எல் தொடரில் பங்குபெற்ற வீரர்களும் விளையாடுகிறார்கள். ஆனால் லங்கா பிரிமீயர் லீக்கில் அவர்களின் சம்பளம் ஐ.பி.எல் சம்பளத்தோடு ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. லங்கா பிரீமியர் லீக்கில் வாங்கும் சம்பளத்தை விட பலமடங்கு அதிக சம்பளம் வாங்கும் நான்கு வீரர்களைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

டொமினிக் டிரேக்ஸ் – வெஸ்ட் இன்டீஸ்

இந்தக் கரீபிய பாஸ்ட்-பவுலிங் ஆல்ரவுண்டரை இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் 1.10 கோடிக்கு குஜராத் அணி வாங்கியிருந்தது. தற்போது இவர் லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக 31.65 இலட்சத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இதைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கியிருந்தார்.

எவின் லூயிஸ் – வெஸ்ட் இன்டீஸ்

கிரிஸில் நின்ற இடத்திலிருந்து பிரமாண்ட சிக்ஸர்களை அடிக்கும் இந்த இடக்கை கரீபிய பேட்ஸ்மேனை, இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. தற்போது இவர் லங்கா பிரீமியர் லீக்கில் யாழ் கிங்ஸ் அணிக்காக 47.47 இலட்சத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இதைவிட நான்கு மடங்கு சம்பளம் அதிகம் பெற்றிருந்தார்.

டீவால்ட் பிரிவீஸ் – தென் ஆப்பிரிக்கா

இந்த வருட அன்டர் 19 உலகக்கோப்பையின் ஹீரோவான டீவால்ட் பிரீவிஸை, நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் மும்பை அணி மூன்று கோடிக்கு வாங்கி இருந்தது. லங்கா பிரீமியர் லீக்கில் இவரை கண்டி பால்கன்ஸ் அணி 19.78 இலட்சத்திற்கு வாங்கி இருக்கிறது. இதோடு ஒப்பிடும் போது ஐ.பி.எல் தொடரில் இவர் 15 மடங்கு கூடுதல் சம்பளம் பெற்றுள்ளார்.

- Advertisement -

வனிந்து ஹசரங்கா – இலங்கை

இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பெங்களூர் அணி விடாப்பிடியாய் நின்று 10.75 கோடிக்கு இவரை வாங்கியது. இவர் லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி பால்கன்ஸ் அணிக்காக 47.47 இலட்சத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதனோடு ஒப்பிடும் போது இவர் ஐ.பி.எல் தொடரில் 20 மடங்கு கூடுதல் சம்பளம் பெற்றிருக்கிறார்!