காயத்தால் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை தவறவிட்ட 4 பிரபல வீரர்கள்!

0
5933
Bumrah

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு அணியில் சில முக்கிய வீரர்கள் கிடைக்காமல் போவது ஒரு பெரிய வருத்தப்படக்கூடிய நிகழ்வாக அணி நிர்வாகத்திற்கு அமையாது. இருக்கும் வீரர்களில் யாரையாவது வைத்து அந்த இடத்தை ஓரளவுக்கு சமன் செய்து கொள்வார்கள்!

ஆனால் உலகக்கோப்பை தொடர் என்பது அப்படி கிடையாது. உலகக்கோப்பை என்பது கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாடுகளும் வெல்ல கனவு காணும் ஒரு முக்கியத் தொடர். இதற்காக உலகக் கோப்பையில் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளும் அதற்காக குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்பு இருந்து தயாராகி, ஒரு அணியை கட்டமைத்து அதைக்கொண்டு விளையாடி வரும்.

- Advertisement -

இப்படியிருக்கையில் உலகக்கோப்பை நெருங்குகையில், முக்கியமான வீரர் எதிர்பாராத காயத்தால் உலகக் கோப்பையில் விளையாட முடியாமல் விலகுவது என்பது, அந்த வீரருக்கு மட்டுமல்ல, அந்த அணி நிர்வாகத்திற்கும் மிகவும் துயரமான ஒரு விஷயம். ஏனென்றால் அந்த வீரருக்கான மாற்று வீரரை உடனே கண்டறிந்து அவரை அணிக்குள் கொண்டு வந்து, இவர்களது திட்டத்திற்கு செயல்பட வைப்பது என்பது பெரிய காரியம். இப்படி இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தால் இடம் பெற முடியாமல் போன நான்கு வீரர்களைப் பற்றித்தான் இந்த கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

ரவீந்திர ஜடேஜா :

ஆல்ரவுண்டர் என்ற சொல்லுக்கு கிரிக்கெட்டில் மிகச் சரியான பொருத்தமான வீரர் இவர்தான். ஏனென்றால் இவர் பேட்டிங் பந்துவீச்சு மட்டுமல்லாது பீல்டிங்கிலும் தன் அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடியவர். அவருடைய இடத்தை இன்னொரு வீரர் நிரப்புவது என்றால் அது சாதாரண காரியம் கிடையாது. மேலும் தற்போது டி20 உலகக் கோப்பைக்காக அமைந்துள்ள இந்திய அணியில், நம்பிக்கைக்குரிய ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் இவர் மட்டும்தான். தற்போது இவர் இல்லாத நிலையில் அணியில் திட்டங்களை ஒட்டுமொத்தமாக மாறி இருக்கிறது என்றே கூறலாம். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த இவர் தற்போது இதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார். அத்தோடு இந்த டி20 உலகக் கோப்பையையும் தவற விடுகிறார்.

- Advertisement -

ஜானி பேர்ஸ்டோ:

இந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் மற்றும் ஓபனிங் பேட்ஸ்மேன் சமீபத்தில் கோல்ஃப் விளையாடும் பொழுது துரதிஷ்டவசமாக காயமடைந்தார். காயத்தைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது இவரால் வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது என்பது. தற்போது ஒரு துவக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் நல்ல பார்மில் இல்லாத காரணத்தால் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறப்பான பார்மில் இருந்த ஜானி பேர்ஸ்டோவும் காயத்தால் விலகி இருப்பது இங்கிலாந்து அணியை பெரிய கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றே கூறலாம். இவருக்கு பதிலாக தற்போது அலெக்ஸ் ஹேலஸ் வந்திருக்கிறார்.

வான்டர் டு டெசன் :

இந்த தென்னாப்பிரிக்க நடுவரிசை பேட்ஸ்மேன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய ஆபத்தான வீரர். வேகம் மட்டும் அல்லாது சுழற்பந்தையும் மிகச் சிறப்பான முறையில் ஆடக்கூடிய வலிமைமிக்க வீரர். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் இவர் இருந்திருந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக காயத்தால் இந்த உலகக் கோப்பை தொடரை இவர் தவற விட்டதோடு, தனது அணியையும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

ஜஸ்பிரித் பும்ரா:

தற்போதைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான். வேகப்பந்து வீச்சில் அத்தனை பிரிவுகளையும் கைக்குள் வைத்திருக்கும் இப்படி ஒரு பந்துவீச்சாளர் காயத்தால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாட முடியாது போனால், அது அந்த அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவாகத்தான் அமையும். முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய துயரமான செய்தி!